Last Updated : 14 Aug, 2020 03:50 PM

 

Published : 14 Aug 2020 03:50 PM
Last Updated : 14 Aug 2020 03:50 PM

கரோனா சூழ்நிலையால் சட்டப்பேரவை தேர்தலை நடத்துவதில் வேறுபடும் பிஹார் அரசியல் கட்சிகள்

கோப்புப் படம்.

புதுடெல்லி

பிஹாரின் சட்டப்பேரவை தேர்தல் வரும் நவம்பருக்குள் நடைபெற வேண்டி உள்ளது. கரோனா பரவலால் இதை நடத்துவதில் அம்மாநிலக் கட்சிகள் வேறுபட்டு நிற்கின்றன.

கரோனா பரவலுக்கு பின் நடைபெறவிருக்கும் முதல் சட்டப்பேரவை தேர்தலாக பிஹார் அமைந்துள்ளது. இங்கு ஐக்கிய ஜனதா தளம்(ஜேடியூ) தலைவரான நிதிஷ்குமார், முதல் அமைச்சராகத் தொடர்ந்து வருகிறார்.

தேசியஜனநாயக கூட்டணியின் உறுப்பினரான இவருக்கு பாஜக ஆதரவு பெருமளவு உள்ளது. இவரது பதவிக்காலம் வரும் நவம்பர் 29-இல் முடிவடைய உள்ளது.

இதற்கு முன்பாக பிஹாரில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த வேண்டியக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனினும், கரோனாவை காரணம் காட்டி அம்மாநில அரசியல் கட்சிகளிடம் தேர்தல் நடத்துவதில் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன.

குறிப்பாக இங்கு ஆளும் கூட்டணிக் கட்சிகள் இடையிலேயே இருவேறு கருத்துகள் நிலவுகின்றன. முக்கியக் கட்சியான ஜேடியூ நவம்பருக்குள் தேர்தல் நடைபெறவில்லை எனில் குடியரசு தலைவர் ஆட்சி அமலாக்கப்பட்டு விடும் என அஞ்சுகிறது.

அம்மாநில நிர்வாகம் தம் கைகளில் இருந்து மத்தியில் ஆட்சிக்கு தலைமை ஏற்றுள்ள பாஜகவிடம் மறைமுகமாகப் போகும் வாய்ப்புள்ளதாகவும் கருதுகிறது. இதனால், குடியரசு தலைவர் ஆட்சி தேர்தலில் பாஜகவின் கைகள் ஓங்கும் வாய்ப்புகளுக்கான அச்சமும் ஜேடியூவிடம் உள்ளது.

இது குறித்து ’இந்து தமிழ் திசை’ இணையத்திடம் ஜேடியூ நிர்வாகிகள் வட்டாரம் கூறும்போது, ‘அரசியலில் யாரையும் நம்ப முடியாது. குடியரசு தலைவர் ஆட்சியில் தேர்தல் நடைபெற்றால் பல வருடங்களான எங்களது மூத்த கூட்டணிக் கட்சியின் நிலை பாஜகவிடம் பறிபோகும்.

வெற்றிக்கு பின் பாஜக முதல்வர் பதவியை வலியுறுத்தினால் நிதிஷின் பதவிக்கு ஆபத்து. எனவே, குறித்த நேரத்தில் தேர்தல் நடத்த நம் கட்சி வலியுறுத்துகிறது.’ எனத் தெரிவித்தனர்.

இதில், பிஹாரின் முக்கிய எதிர்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) முற்றிலும் வேறுபடுகிறது. இதற்காகக் கரோனா சூழலை அக்கட்சி காரணமாக்கினாலும் அதன் பின்னணியில் லாலுவின் விடுதலை அமைந்துள்ளது.

இவர், கால்நடைத்தீவன வழக்கில் சிக்கி ஜார்கண்ட் சிறையில் உள்ளார். லாலுவிற்கானத் தண்டனைக் காலத்தில் பாதி, வரும் நவம்பரில் முடிந்து அவருக்கு ஜாமீன் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளதாகக் கட்சி எண்ணுகிறது.

அதன் பிறகு லாலுவின் தலைமையில் தேர்தலை சந்தித்தால் வெற்றி உறுதி எனவும் ஆர்ஜேடி நம்புகிறது. இதன் காரணமாக அக்கட்சி கரோனா காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைக்க விரும்புவதாகத் தெரிகிறது.

இது குறித்து ஆர்ஜேடி சார்பில் மத்திய தேர்தல் ஆணையத்திற்கு எழுதப்பட்டக் கடிதத்தில், ‘கரோனாவால் வாக்கு சதவிகிதம் மிக அதிகமாகக் குறைந்து விடும் அபாயம் உள்ளது.

கரோனா சூழலில் வாக்காளர்களையும், அதன் அலுவலர்களையும் ஆணையத்தால் பாதுகாக்க முடியாது. இதில் உயிர்கள் பலியானால் அதற்கு பொறுப்பு ஏற்பது யார்? எனவே, தேர்தலை ஒத்தி வைப்பது நல்லது.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனாவினால் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி வலியுறுத்தி, மத்திய தேர்தல் ஆணையத்திற்கு பிஹார் மாநிலக் காங்கிரஸும் கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரத்தில் பாஜகவின் கருத்து பூடகமாக உள்ளது.

இக்கட்சியின் மாநில செய்திதொடர்பாளரான நிகில் ஆனந்த் கூறும்போது, ‘நம் கட்சி தேர்தல் ஆணையத்தை மிகவும் மதிக்கிறது. இந்த விஷயத்தில் ஆணையம் எடுக்கும் முடிவு எதுவாக இருப்பினும் அதை ஏற்கும்.’ எனக் கூறியுள்ளார்.

இப்பிரச்சனையில் அனைத்துகட்சிகளின் கூட்டம் நடத்தி மத்திய தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x