Last Updated : 14 Aug, 2020 02:53 PM

 

Published : 14 Aug 2020 02:53 PM
Last Updated : 14 Aug 2020 02:53 PM

சிபிஎஸ்இ 10,12-ம் வகுப்பில் தோல்விஅடைந்த மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு

கோப்புப்படம்

புதுடெல்லி

சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு செப்டம்பரில் மறுதேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி தெரிவித்தார்.

அதேபோல, 12-ம் வகுப்பில் குறிப்பிட்ட பாடங்களில் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களுக்கும் குறைவாகப் பெற்ற மாணவர்கள் மீண்டும் தேர்வெழுதும் திறன்மேம்பாட்டுத் தேர்வும் செப்டம்பரில் நடத்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சிபிஎஸ்இ வாரிய 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில், 12,109 பள்ளிகள் கலந்துகொண்டன. 4,984 தேர்வு மையங்களில் பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. எனினும் கரோனா தொற்று காரணமாக தேர்வுகள் முழுமையாக நடைபெறவில்லை. நடைபெறாத தேர்வுகளுக்கு முந்தைய தேர்வுகள் மற்றும் அக மதிப்பீடு அடிப்படையில் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது.

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த மாதம் 13-ம் தேதி வெளியாகின. இதில் 88.78 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர்.

அதேபோல 95 சதவீதத்துக்கும் அதிகமாக மதிப்பெண்களுடன் 38,686 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். கடந்த 2019-ம் ஆண்டு 17,693 மாணவர்கள் மட்டுமே 95 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றிருந்தனர். 90 சதவீதம் மதிப்பெண்களுக்கு அதிகமாக பெற்று கடந்த 2019ம் ஆண்டு 94 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றநிலையில், இந்த ஆண்டு 1.60 லட்சம் மாணவர்கள் பெற்றனர்.

இருப்பினும் சில மாணவர்கள் தங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களை சில பாடங்களில் பெற்றிருக்க மாட்டார்கள், பலர் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களுக்கு குறிப்பிட்ட பாடப்பிரிவில் முன்னேற்றத் தேர்வும், தோல்வி அடைந்தவர்களுக்கு மறுதேர்வும் செப்டம்பரில் நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் நிருபர்களிடம் கூறுகையில் “ சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பில் பொதுத்தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு வரும் செப்டம்பர் மாதம் மறுதேர்வு நடத்தப்புடம்.

குறிப்பிட்ட சில பாடங்களில் எதிர்பார்த்த மதிப்பெண்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்று முன்னேற்றத் தேர்வுக்காக காத்திருக்கும்மாணவர்களுக்கும் செப்டம்பர் மாதம் தேர்வு நடத்தப்படும். இதற்கான தேதி குறித்துஆலோசித்து வருகிறோம் விரைவில் தேதி அறிவிக்கப்படும். இந்த மறு தேர்விலும், முன்னேற்றத் தேர்விலும் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களே இறுதியாக எடுத்துக்கொள்ளப்படும்.

பள்ளிகளில் படித்த தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தோல்வி அடைந்தவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளியைத் தொடர்பு கொண்டு விவரங்களைப் பெறலாம், தனித்தேர்வு எழுதிய மாணவர்கள் வரும் 22-ம் தேதிக்குள் இணையதளம்மூலம் விண்ணப்பிக்கலாம்.

இந்த ஆண்டு நடந்த பாடப்பி்ரிவுகள் அடிப்படையில்தான் தேர்வுகள் நடத்தப்படும். விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கு முன்னர் மாணவர்கள் தகுதி மற்றும் தேர்ச்சி அளவுகோல்கள் மற்றும் தேர்வு ஆண்டு மற்றும் பாடத்திட்டங்களை கவனமாகப் படித்து நிரப்ப வேண்டும்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x