Last Updated : 14 Aug, 2020 10:43 AM

 

Published : 14 Aug 2020 10:43 AM
Last Updated : 14 Aug 2020 10:43 AM

ஸ்மார்ட்போன் இல்லை, அடிப்படை வசதியில்லை: ஜப்பானிய மொழியைக் கற்று, பேசி அசத்தும் மகாராஷ்டிரா அரசுப்பள்ளி மாணவர்கள்

ஸ்மார்ட்போன் இல்லை, பெரும்பாலான வீடுகளில் தொலைக்காட்சி பெட்டிகூட இல்லை, கிராமத்தில் முறையான சாலை வசதியில்லை. இருந்தும், அயல்நாட்டு மொழியைக் கற்க முடியும் என்ற ஆர்வத்தில் ஜப்பானிய மொழியைக் கற்று அனாயசமாகப் பேசி மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தின் அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்துகின்றனர்.

அவுரங்காபாத் நகரிலிருந்து 25 கி.மீதொலைவில் உள்ள காடிவாத் எனும் கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்கள்தான் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தை கற்க வேண்டும் என்ற ஆசையில் ஜப்பானிய மொழியையும் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான குழந்தைகள் ஏழ்மை நிலையில் இருப்பவர்கள். பெரும்பலான வீடுகளில் தொலைக்காட்சிப் பெட்டிகூட இல்லை. ஆனால், மகாராஷ்டிரா அரசின் இணையதள வசதிதான் இந்த கிராமத்தின் குழந்தைகள் ஜப்பானிய மொழியை கற்ற உதவியாக இருந்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்த கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளி அயல்நாட்டு மொழியைக் கற்கும் திட்டத்தை 4-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கொண்டு வந்தது. இந்த திட்டத்தின்படி மாணவர்கள் ஏதேனும் ஒரு அயல்நாட்டு மொழியைக் கற்றுக்கொள்ள வேண்டும்.

ஆனால்,மாணவர்கள் பெரும்பாலானோர் ரோபாட்டிக்ஸ் மீதுள்ள ஆர்வத்தால் ஜப்பானிய மொழியைக் கற்பதில் ஆர்வம் காட்டினர். ஆனால், ஜப்பானிய மொழியைக் கற்க முறையான பாடநூல்களும இல்லை, ஆசிரியர்களும் இல்லை.

இருப்பினும், யூடியூப் வீடியோக்கள் மூலமும், பல்வேறு இடங்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள், மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மூலம் அங்கிருக்கும் ஆசிரியர்களே ஜப்பானிய மொழியைக் கற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில், இந்த செய்தியை அறிந்த அவுரங்காபாத் நகரைச் சேர்ந்தவரும், ஜப்பானிய மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவருமான சுனிய் ஜாக்டியோ என்பவர் ஜப்பானிய மொழியை முறைப்படி இலவசமாக மாணவர்களுக்குக் கற்றுக்கொடுக்க முன்வந்தார். இவரின் முயற்சியால் இப்போது மாணவர்கள் ஜப்பானிய மொழியில் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து பள்ளியின் ஆசிரியர் தாதாசாகேப் நவ்புதே கூறுகையில் “ இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களில்பெரும்பாலானோர் ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பத்தைக் கற்பதில் ஆர்வமாக இருந்தார்கள். அதனால், ஜப்பானிய மொழியைக் கற்கவும் ஆர்வம் ஏற்பட்டது.

எங்களிடம் முறையான ஜப்பானி நூல்கள் இல்லை. யூடியூப் பார்த்தும், மொழிபெயர்ப்பு நூல்களை வாங்கியும் பாடங்களை நடத்தினோம். ஆனால், அவுரங்காபாத்தைச் சேர்ந்த சுனில் என்பவர் தாமாக முன்வந்து ஜப்பானிய மொழியை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க விரும்பினார்.

இப்போது பள்ளியில் பயிலும் 350 மாணவர்களில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜப்பானிய மொழியில் பேசவும், எழுதவும் செய்கிறார்கள். ” எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து ஜப்பானிய மொழி கற்றுத்தரும் சுனில் ஜாக்டியோ கூறுகையில் “ நான் ஓய்வு நேரங்களில் மாலை நேரத்தில் இந்த பள்ளி மாணவர்களுக்கு ஜப்பானிய மொழியை இலவசமாகக் கற்றுக் கொடுத்தேன்

. கடந்த ஜூலை மாதத்திலிருந்து ஆன்-லைன் மூலம் 20 முதல் 22 வகுப்புகள் வரை எடுக்கிறேன். மாணவர்கள் ஆர்வத்துடன் ஜப்பானிய மொழியை கற்கிறார்கள். குறுகிய காலத்தில் ஜப்பானிய மொழியில் பேசவும், எழுதவும் முடிவதைப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.

பெரும்பாலான குழந்தைகளிடம் ஸ்மார்ட்போன்கூட கிடையாது. ஆனால், விஷாய் மித்ரா எனும் அரசின் திட்டத்தின் கீழ் ஜப்பானிய மொழியைக் கற்கும் வகுப்பில் பங்கேற்ற குழந்தை மற்ற மாணவர்களுக்கும் கற்றுக்கொடுக்கிறார்கள்” எனத் தெரிவி்த்தார்

பள்ளியின் தலைமை ஆசிரியர் பத்மாகர் ஹுல்ஜுடே கூறுைகயில்” ஜூலையிலிருந்து ஆன்லைன் வகுப்புகளை சுனில் நடத்தத் தொடங்கியதிலிருந்து மாணவர்கள் ஆர்வத்துடன் ஜப்பானிய மொழியைக் கற்று வருகிறார்கள். மாணவர்கள் ஒருவொருக்கொருவர் ஜப்பானிய மொழியில் பேசுவதைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது .

சமீபத்தில் விவசாயி ஒருவரின் மகளான வைஷ்ணவி கோல்கே எனும் மாணவி ஜப்பானிய மொழியில் முழுமையாக தன்னை அறிமுகம் செய்து குடும்பத்தாரையும் அறிமுகம் செய்து வைத்தது, இந்த திட்டத்தின் வெற்றியாகும். தொடக்கத்தில் சில வார்த்தைகளைக் கற்றுக்கொண்டு அதை வைத்து வாக்கியங்களை அமைத்து மாணவர்கள் பேசுகிறார்கள். ” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x