

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையில் நல்ல நட்புறவு நீடிக்கிறது. இந்நிலையில், மாலத்தீவில் மிகப்பெரிய பாலம் மற்றும் 3 தீவுகளை இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு ரூ.3,745 கோடி நிதியுதவியை இந்தியா வழங்கும் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். வியாழக்கிழமை மாலத்தீவு வெளியுறவுத் துறை அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இத்தகவலை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டார்.
‘கிரேட்டர் மாலே கனெக்ட்டிவிட்டி புராஜெக்ட்’ (ஜிஎம்சிபி) என்ற பெயரில் இத்திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் 6.7 கி.மீ. தூரத்துக்கு பாலம் மற்றும் சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இத்திட்டத்தால் வில்லின்கிலி, கலிபஹு, திலபுஷி ஆகிய குட்டித் தீவுகள் மாலேவுடன் இணைக்கப்படும். இவற்றில் கலிபஹு தீவில் உள்ள துறைமுகத்துடன் மாலே இணைக்கப்படுவது மிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதன் மூலம் அருகில் உள்ள தீவுகளுக்கும் மாலேவுக்கும் போக்குவரத்து எளிமையாகும். இதன்மூலம் மாலத்தீவின் பொருளாதாரம் வளரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்,இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையில் கடல் வழியாக சரக்குப் போக்குவரத்து அதிகரிக்கும் என்று அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி தெரிவித்தார்.