

நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்துக்கு எதிராக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி, வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், மூத்த பத்திரிகையாளர் என். ராம் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை திரும்பப் பெற உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய சில தீர்ப்புகளை விமர்சிக்கும் வகையில், வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ட்விட்டரில் சில கருத்துகளை பகிர்ந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக விளக்கமளிக்குமாறு கடந்த ஜூலை 22-ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு சட்டப்பிரிவுக்கு எதிராக பிரசாந்த் பூஷண், மூத்த பத்திரிகையாளர் என். ராம், முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஷோரி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு காணொலிக் காட்சி முறையில் நேற்று நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவண், “நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்துக்கு எதிராக ஏற்கெனவே பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அவற்றுடன் இந்த மனுவையும் சேர்க்க வேண்டாம் என மனுதாரர்கள் கருதுகின்றனர். எனவே, இந்த மனுவை திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்” எனக் கோரினார்.
அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகள், குறிப்பிட்ட மனுவை திரும்பப் பெற மனுதாரர்களுக்கு அனுமதி அளித்தனர். மேலும், உச்ச நீதிமன்றத்தை தவிர வேறு நீதிமன்றங்களில் இந்த மனுவை எதிர்காலத்தில் தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.