குஜராத்தில் வங்கி ‘டெபாசிட்’களை திரும்பப் பெறும் படேல் சமூகத்தினர்: அரசியல்வாதிகள் ஊருக்குள் நுழையவும் தடை

குஜராத்தில் வங்கி ‘டெபாசிட்’களை திரும்பப் பெறும் படேல் சமூகத்தினர்: அரசியல்வாதிகள் ஊருக்குள் நுழையவும் தடை
Updated on
1 min read

குஜராத்தில் படேல் சமூகத்தினர் தங்கள் இடஒதுக்கீட்டு போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் வங்கி ‘டெபாசிட்’களை திரும்பப் பெற்று வருகின்றனர். மேலும் அரசியல்வாதிகள் தங்கள் ஊருக்குள் நுழையவும் தடை விதித்துள்ளனர்.

குஜராத்தில் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் (ஓபிசி) சேர்க்க வலியுறுத்தி போராட்டத்தில் குதித்தனர்.

கடந்த 25-ம் தேதி அகமதாபாத்தில் இவர்களின் பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 8 பேர் உயிரிழந்தனர். இதனால் அம்மாநிலத்தில் பல நாட்களுக்கு பதற்றம் நிலவியது.

இந்நிலையில் படேல் சமூகத் தினர் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பொருளாதார ஒத் துழையாமை போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

‘சர்தார் படேல் குழு (எஸ்பிஜி)’ என்ற படேல் சமூக அமைப்பின் தலைவரான லால்ஜி படேல் அண்மையில் வங்கி டெபாசிட்களை திரும்பப் பெறு மாறு தங்கள் சமூகத்தினருக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இவரது கோரிக்கையை ஏற்று சமர்கந்தா மாவட்ட கூட்டுறவு வங்கியில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ.20 லட்சம் டெபாசிட்களை இச்சமூகத்தினர் திரும்பப் பெற்றுள்ளனர். இவ்வாறு திரும்பப் பெறுவது வரும் நாட்களில் அதிகரிக்கலாம் என இவ்வங்கி மேலாளர் கூறினார்.

இதுதவிர குஜராத்தில் காந்தி நகர், ஆரவல்லி உள்ளிட்ட மாவட்டங்களில் படேல் சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் கிராமங்களில் அரசியல்வாதிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

“வாக்கு பிச்சை கேட்டு இங்கு யாரும் வரக்கூடாது. மேலும் பொதுக்கூட்டம் போன்ற அரசியல் நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது. மீறினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று இந்த கிராமங்களில் பேனர்கள் வைக் கப்பட்டுள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in