

பிரதமர் மன்மோகன் சிங் பயன்படுத்திய பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் ரக காரை நரேந்திர மோடி பயன்படுத்துவாரா என்ற கேள்வி ஊடக வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
கடந்த 2003-ம் ஆண்டுவரை அம்பாசிடர் கார்தான் இந்தியப் பிரதமரின் அதிகாரப்பூர்வ காராக பயன்படுத்தப்பட்டு வந்தது.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் காரணமாக பிரதமருக்காக அதிக பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் ரகத்தைச் சேர்ந்த 6 கார்கள் வாங்கப்பட்டன. பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு கமாண்டோ படையினருக்காக பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 ரகத்தைச் சேர்ந்த 12 கார்கள் வாங்கப்பட்டன.
பிரதமர் மன்மோகன் சிங் இப்போது பயன்படுத்தி வரும் பி.எம்.டபிள்யூ 7 சீரிஸ் கார் அவருக்காக பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்டதாகும்.
இதில் குண்டுகள் துளைக்காத புல்லட் புரூப் கதவு, கண்ணாடி, கண்ணிவெடித் தாக்குதலிலும் சேதமடையாத வலுவான அடிப்புறம், ரன் பிளாட் டயர்கள், குண்டுவெடிப்பிலும் தீப்பிடிக்காத பெட்ரோல் டேங்க், ஏவுகணை, வெடிகுண்டு களைக் கண்டறியும் வெப்ப சென்சார்கள், செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சாதனம் என பல்வேறு அதிநவீன வசதிகள் உள்ளன.
இந்தக் காரையே புதிய பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி பயன்படுத்துவரா அல்லது நீண்ட காலமாக அவர் பயன்படுத்தி வரும் மஹிந்திரா ஸ்கார்பியோ காரை அதிநவீன பாதுகாப்பு வசதிகள் கொண்டதாக மாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
பொதுவாக பிரதமரின் காருக்கு முன்னும் பின்னும் மொத்தம் 9 கார்கள் அணிவகுத்துச் செல்லும். இந்த அணிவகுப்பில் செல்லும் இரண்டு பி.எம்.டபிள்யூ கார்கள் பிரதமரின் பி.எம்.டபிள்யூ கார் போன்றே தோற்றமளிக்கும். இதர பி.எம்.டபிள்யூ. கார்களில் பாதுகாப்பு அலுவலர்கள் செல்வார்கள். இவை தவிர வெடிகுண்டு நிபுணர்கள் குழுவின் சிறப்புக் காரும் அணிவகுப்பில் இடம்பெறும்.
நரேந்திர மோடிக்காக ஸ்கார்பியோ காரில் அதிநவீன பாதுகாப்பு வசதிகளை செய்து தர தயாராக உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு கமாண்டோ பிரிவு அதிகாரிகள் கூறியபோது, பாதுகாப்பு விஷயத்தில் பி.எம்.டபிள்யூ. காரே சிறந்தது, எனினும் நரேந்திர மோடியின் முடிவே இறுதியானது என்று தெரிவித்தனர்.