

பெங்களூருவில் முகநூலில் மதவெறுப்பை தூண்டும் வகையில்பதிவிட்டதால் கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு கலவரம் ஏற்பட்டு. புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி, அவரது சகோதரி ஜெயந்தி ஆகியோரின் வீடுகள், 3 காவல் நிலையங்கள், அங்கிருந்த வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டன. இதுதவிர அங்குவாழும் பொதுமக்களின் வாகனங்களும், வீடுகளும் கடுமையாக தாக்கப்பட்டுள்ளன.
தேவர் ஜீவனஹள்ளியை சேர்ந்த மலர்மதி கூறுகையில், ''எங்கள் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தை கொளுத்த நான்கு பேர் ஓடி வந்தார்கள். நான் தைரியத்தை வரவழைத்து கொண்டு வெளியே போய், நாங்கள் மிகவும் ஏழைகள். இந்த வண்டியில் தான் வேலைக்கு போய் வருகிறேன். தயவுசெய்து நெருப்பு வைக்க வேண்டாம் என கை எடுத்து கும்பிட்டேன். ஆனால் அவர்கள் என்னையும் சேர்த்து தீ வைத்து விடுவதாக மிரட்டி, உள்ளே தள்ளிவிட்டனர். கஷ்டப்பட்டு காசு சேர்த்து கடந்த ஆண்டு புதிதாக வண்டியை எரித்துவிட்டார்கள்'' என கண்ணீரோடு கூறினார்.
அப்பகுதியை சேர்ந்த சமூகசெயற்பாட்டாளர் மணிவண்ணன் கூறியதாவது: கலவரம் நடந்த தேவர் ஜீவனஹள்ளி, காடு கொண்டனஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய பகுதிகளில் தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகளவில் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏழை எளிய நடுத்தர மக்கள். வீட்டுக்குள் புகுந்து டிவி, பீரோ, குளிர்சாதன பெட்டி, மர சாமான்களை சேதப்படுத்தினர்.
இரும்பு கம்பி, உருட்டு கட்டை ஆகியவற்றால் தாக்கியதால் 50க்கும் மேற்பட்ட தமிழர்கள் காயமடைந்துள்ளனர். இதில் 20 பேர் பெண்களும், வயதானவர்களும் ஆவார்கள். இந்த தாக்குதலில் ஈடுபட்ட முஸ்லிம் இளைஞர்கள் போதையில் இருந்தனர்.
வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட் டிருந்த கார், வேன், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இதை தடுக்க முயற்சித்த உரிமையாளர்களை கத்தியை காட்டி, வெட்டி போட்டு விடுவதாக மிரட்டினர். ஏற்கெனவே ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள இம்மக்களின் வாகனங்களும் எரிக்கப்பட்டதால் மிகுந்த இன்ன லுக்கு ஆளாகியுள்ளனர்.
இவ்வாறு மணிவண்ணன் கூறினார்.