Published : 13 Aug 2020 05:37 PM
Last Updated : 13 Aug 2020 05:37 PM

டெல்லி, குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

டெல்லி, குஜராத், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

நாடுமுழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களில் இடைவிடாது மழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பியுள்ளன. கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த இரு வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் குடகு, மைசூரு, ஷிமோகா, ஹாசன், பெல்லாரி, பீதர் உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. அங்குள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பெல்லாரி, பீஜாப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

குடகில் இரவு பகலாக கொட்டித் தீர்க்கும் மழையால் காவிரி, லக்ஷ்மண தீர்த்தம் உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஹேமாவதி, ஹாரங்கி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்துள்ளது. கேரளாவில் வயநாட்டில் கனமழை பெய்துவருவதால் கபிலா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மைசூரு மாவட்டம் பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் அடுத்த 3 நாட்களுக்கு நாட்டில் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதுகுறித்து கூறியுள்ளதாவது:

இமாசலப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹரி்யானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமேற்கு இந்திய பகுதிகளில் அடுத்த 2-3 நாட்களுக்கு கனமழை முதல் அதிகனமழை பரவலாக பெய்யக் கூடும்.

குஜராத் மாநிலம், கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளிலும் அடுத்த 48 மணி நேரத்திற்கு பரவலாக கனமழை பெய்யக் கூடும். கொங்கன் கோவாவின் வடக்கு பகுதிகளில் அடுத்த 72 மணி நேரத்திற்கு கனமழை அல்லது மிகக் கனழை பெய்யக் கூடும்.
இவ்வாறு இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x