

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக உருவாக்கப்பட்ட ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் தலைவர் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த வாரம் அயோத்தியில் நடந்த ராமர் கோயிலுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடியுடன் மகந்த் நிர்த்தியா தாஸ் பங்கேற்றிருந்த சூழலில், இந்த வாரம் அவருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து, கரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் அவருக்குக் கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
குர்கோவனில் உள்ள மேதாந்தா மருத்துவனையில் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. உ.பி. முதல்வர் ஆதித்யநாத், மேதாந்தா மருத்துவமனையின் மருத்துவர் ட்ரீஹானை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
மேலும், அனைத்துவிதமான உதவிகளையும் வழங்கவும், உயர்தரமான மருத்துவக் கவனிப்பு அளிக்கவும் முதல்வர் ஆதித்யநாத் மதுரா மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார் என்று மாநில அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா கடந்த 5-ம் தேதி அயோத்தியில் நடந்தது. கரோனா வைரஸ் பரவல் தீவிரமாக இருப்பதால், 175 விஐபிக்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
பிரதமர் மோடி, முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் படேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் பங்கேற்றனர். ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்டினார்.