

உச்ச நீதிமன்றத்தின் சில அமர்வுகளில் மட்டும் அடுத்த வாரம் முதல் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நேரடியாகச் சந்தித்து வழக்குகளை விசாரிக்கும் முறை தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
15 அமர்வுகளில் 2 அல்லது 3 அமர்வுகளை இதுபோல் நேரடியாக விசாரிக்கும் முறைக்குத் திரும்புவது குறித்து 7 நீதிபதிகள் கொண்ட குழு தலைமை நீதிபதிக்குப் பரிந்துரை செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கரோனா வைரஸ் பரவத் தொடங்கியபின், கடந்த மார்ச் 25-ம் தேதி முதல் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நீதிபதிகள், வழக்கறிஞர்கள் நேரடியாகச் சந்தித்து விசாரிக்கும் முறை ரத்து செய்யப்பட்டது.
கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக வழக்கு விசாரணை அனைத்தும் காணொலி மூலமே நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டும், ஊரடங்கு தளர்த்தப்பட்டபோதிலும் இந்த முறை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் சந்தித்து வழக்கு விசாரணை நடக்கும் முறை தொடங்கப்பட வேண்டும் எனக் கோரி வழக்கறிஞர்கள் கடந்த ஜூலை மாதம் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே, நேரடியாக வழக்கு விசாரணையை மீண்டும் தொடங்க ஏதுவான சூழல் இருக்கிறதா என ஆய்வு செய்ய 7 நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்தார்.
அந்தக் குழுவின் தலைவராக மூத்த நீதிபதி ரமணா, நீதிபதிகள் அருண் மிஸ்ரா, ரோஹின்டன் நாரிமன், யு.யு.லலித், ஏ.எம். கான்வில்கர், டி.ஒய்சந்திரசூட், எல்.என். ராவ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
இந்நிலையில் கடந்த மாத இறுதியில் நீதிபதி ரமணா தலைமையிலான நீதிபதிகள் குழுவைச் சந்தித்து வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர், பிரதிநிதிகள் மீண்டும் நேரடி வழக்கு விசாரணை நடைமுறையைத் தொடங்க வலியுறுத்தினர். ஆனால், இப்போது சூழல் சாதகமாக இல்லை. இரு வாரங்களுக்குப் பின் பேசலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் நீதிபதி ரமணா தலைமையிலான 7 நீதிபதிகள் குழுவைக் கடந்த செவ்வாய்க்கிழமை, (எஸ்சிஏஓஆர்ஏ) உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் தலைவர் சிவாஜி எம் ஜாதவ், பார் கவுன்சில் தலைவர் மனன் குமார் மிஸ்ரா, உச்ச நீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் துஷ்யந்த் தவே, சிவாஜி ஜாதவ் ஆகியோர் சந்தித்து நேரடி வழக்கு விசாரணை முறையைத் தொடங்க வலியுறுத்தினர்.
இந்த முறை வழக்கறிஞர்கறின் ஆலோசனையைப் பரிசீலிப்பதாக உறுதியளித்த நீதிபதிகள் அடுத்த வாரத்திலிருந்து குறைந்தபட்சம் 2 அல்லது 3 அமர்வுகளில் நேரடி வழக்கு விசாரணை நடத்தும் முறையைத் தொடங்குவதற்குப் பரிந்துரைக்கிறோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து (எஸ்சிஏஓஆர்ஏ) உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களின் தலைவர் சிவாஜி எம் ஜாதவ் நிருபரிடம் கூறுகையில், “அடுத்த வாரத்திலிருந்து 15 அமர்வுகளில் 2 அல்லது 3 அமர்வுகளில் நேரடி வழக்கு விசாரணை முறையை மீண்டும் தொடங்குவது குறித்து தலைமை நீதிபதியிடம் பரிந்துரைப்பதாக நீதிபதி ரமணா குழுவினர் தெரிவித்தனர்.
இந்த இடைப்பட்ட காலத்தில் தேவையான ஏற்பாடுகளை நீதிமன்றப் பதிவாளர் செய்ய உள்ளார். வழக்கு விசாரணை நேரடியாக நடக்கும்போது தேவையான அனைத்துச் சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும். மேலும், வழக்கறிஞர்களுக்குக் காணொலி மூலம் விசாரணை நடத்தவும் வாய்ப்பு வழங்கலாம். எது தேவையோ அதைத் தேர்வு செய்து கொள்ளட்டும் என்று தெரிவித்தோம். ஆனால், இதை நீதிபதிகள் குழுதான் முடிவு செய்யும்” எனத் தெரிவித்தார்.