

கடந்த ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ஜுன் சிங் தேர்தல் ஆணையத்திடம் தன் சொத்துக்கள் பற்றிய விவரம் ஒன்றை மறைத்து தவறான தகவல் அளித்ததாகக் குற்றம்சாட்டிய திரிணமூல், அவர் எம்.பி. பதவி பறிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.
அர்ஜுன் சிங், 2019-ல் திரிணமூல் கட்சியிலிருந்து பாஜகவுக்குத் தாவினார். இந்தக் குற்றச்சாட்டை மறுத்த அவர் முடிந்தால் அவர்கள் இதனை நிரூபிக்கட்டும் என்று சவால் விடுத்தார்.
“கோடிக்கணக்கில் பங்குகளை வாங்கிய அர்ஜுன் சிங் தன் பிரமாணப்பத்திரத்தில் இந்தத் தகவலைக் குறிப்பிடாமல் சொத்து விவர தப்பிதம் செய்துள்ளார். தேர்தல் ஆணையத்திடம் பொய் கூறியுள்ளார், இதனையடுத்து அவர் எம்.பி. பதவி பறிக்கப்பட வேண்டும், நாங்கள் இது தொடர்பாக விரைவில் நீதிமன்றத்தை நாடுவோம். தேர்தல் ஆணையம் அர்ஜுன் சிங் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம்” என்று திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோமந்த் ஷாம் என்பவர் தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த பாஜக எம்.பி. அர்ஜுன் சிங், “டிஎம்சி முதலில்ல் தன் குற்றச்சாட்டை நிரூபிக்கட்டும். அதன் பிறகு என்னை நீக்குவது பற்றி கோரிக்கை வைக்கட்டும். குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது” என்று மறுத்தார்.
அர்ஜுன் சிங் முன்னதாக திரிணமூல் கட்சியில் எம்.எல்.ஏ.வாக இருந்தார், பாஜகவுக்குத் தாவிய பிறகு எம்.பி.யாக்கப்பட்டார். இவர் வென்ற பிறகு இவரது தொகுதியின் பாட்பரா பகுதியில் வன்முறையின் பிடியில் இருந்ததாக திரிணமூல் குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.