Last Updated : 13 Aug, 2020 06:58 AM

 

Published : 13 Aug 2020 06:58 AM
Last Updated : 13 Aug 2020 06:58 AM

அனுமன் கோயிலை காக்க அரணாக நின்ற இஸ்லாமியர்கள்- பெங்களூரு கலவரத்தில் நெகிழ்ச்சி சம்பவம்

பெங்களூருவில் கலவரம் நடைபெற்ற நள்ளிரவில், நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் மனிதச் சங்கிலி அமைத்து அரணாக நின்று அனுமன் கோயிலை காவல் காத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் முகநூலில் மத வெறுப்பை தூண்டும் வகையில் பதிவிட்டதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு கலவரம் ஏற்பட்டது. இந்த வன்முறை சம்பவத்தில் 60 போலீஸார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காவல் நிலையத்துக்கு தீ வைக்கப்பட்டதை தொடர்ந்து போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். இதனால் பெங்களூரு மாநகரம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து, இந்து கோயில்களுக்கு போலீஸ் மற்றும் தன்னார்வலர்கள் பாதுகாப்பு போடப்பட்டது.

இந்நிலையில், ஷாம்புரா சாலையில் உள்ள அனுமன் கோயிலை சுற்றி, நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் நள்ளிரவு நேரத்தில் மனிதச் சங்கிலி முறையில் கைக்கோர்த்து அரணாக நின்றனர். உரிய நேரத்தில் கோயிலுக்கு பாதுகாப்பு அளித்ததால் அங்கு நடைபெறவிருந்த வன்முறை தடுக்கப்பட்டது.

இதுகுறித்து பாதுகாப்பில் ஈடுபட்ட முகமது காலித் கூறுகையில், “நான் தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறேன். அலுவலகத்தில் இருந்து இரவில் வீடு திரும்பிய போது 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அனுமன் கோயில் அருகே நின்றிருந்தனர். ஆட்டோவில் வந்த சிலர் கல் மூட்டையை கொண்டுவந்தனர்.

அவர்களின் நடவடிக்கைகள் சந்தேகப்படும் படியாக இருந்ததால் உடனே என் நண்பர்கள், உறவினர்களை அழைத்து விபரத்தை தெரியப்படுத்தினேன். பின்னர், அனைவரும் மனிதச் சங்கிலி அமைத்து 11 மணியில் இருந்து நள்ளிரவு 2 மணி வரை அனுமன் கோயிலுக்கு பாதுகாப்பாக நின்றோம். எங்களை பார்த்ததும் அந்த இளைஞர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்’’ என்றார்.

கலவர நேரத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் இந்து கோயிலுக்கு காவல் அரணாக நின்ற புகைப்படங்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொத்துகள் பறிமுதல்

பெங்களூருவில் நேற்று நடந்த கலவரம் குறித்து கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சர் சிடி ரவி கூறியதாவது:

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்தபோது மக்களைஒருங்கிணைத்த எஸ்டிபிஐ அமைப்பு இதன் பின்னணியில் இருக்கிறது.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக உத்தர பிரதேசத்தில் போராட்டம் நடந்தபோது, பொது சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. அவ்வாறு சேதப்படுத்தியவர்களை அடையாளம் கண்டு, நஷ்டத்தை ஈடுகட்டும் வகையில் அவர்களுடைய சொத்துகள் பறிமுதல் செய்ய அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டார். உ.பி. பாணியில் பெங்களூருவில் வன்முறையில் பொது சொத்துக்களை சேதப்படுத் தியவர்களை கண்டறிந்து, அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும்.

இவ்வாறு சி.டி.ரவி தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x