முகநூல் பதிவை கண்டித்து நள்ளிரவில் பெரும் கலவரம் வெடித்தது; பெங்களூருவில் துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழப்பு: 250 வாகனங்கள் தீக்கிரை; எம்எல்ஏ வீடு, காவல் நிலையங்களுக்கு தீ வைப்பு: 60 போலீஸார் உட்பட 200 பேர் படுகாயம்

தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனங்களை போலீஸார் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
தீ வைத்து எரிக்கப்பட்ட வாகனங்களை போலீஸார் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
Updated on
3 min read

முகநூல் பதிவை கண்டித்து பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு ஒரு தரப்பினர் வன்முறையில் ஈடுபட்டதால் கலவரம் வெடித்தது. எம்எல்ஏவின் வீடு, காவல் நிலை யம், வாகனங்களுக்கு தீ வைக்கப் பட்டது. கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு புலிகேசி நகர் காங்கிரஸ் எம்எல்ஏ வாக இருப்பவர் அகண்ட சீனிவாச மூர்த்தி. இவரது தங்கை மகன் நவீன் (23), முஸ்லிம் மதத்தினருக்கு எதிராக தொடர்ந்து முகநூலில் பதிவுகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் மத வெறுப்பை தூண்டும் வகை யில் ஒரு பதிவை வெளியிட்டு, அதை அகண்ட சீனிவாசமூர்த்தியின் பக் கத்திலும் பகிர்ந்ததாக தெரிகிறது.

பல்முனை தாக்குதல்

இதைக் கண்டு ஆத்திரம் அடைந்த முஸ்லிம்கள் காடு கொண்டனஹள்ளி காவல் நிலை யத்தில் புகார் அளித்தனர். போலீ ஸார் புகாரை ஏற்க மறுத்ததால் செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காவல் நிலையம் முன்பு திரண்டு எம்எல்ஏவுக்கும், போலீஸாருக்கும் எதிராக கோஷம் எழுப்பினர்.

காவல் பைரசந்திராவில் உள்ள எம்எல்ஏவின் வீட்டில் நவீன் தஞ்சம் அடைந்திருப்பதாக தகவல் பர வியது. அங்கு திரண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர், நுழைவாயிலை உடைத்து வீட்டுக்குள் நுழைய முயன்றனர். அப்போது சிலர் எம்எல்ஏ வீடு மீது கல்வீசி தாக்குதல் நடத்தினர். வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இந்த தீ வீட்டுக்கும் பரவியது. அங்கிருந்த காங்கிரஸ் தொண்டர்கள் தீயை அணைத்தனர்.

இதனிடையே அம்பேத்கர் சாலையில் திரண்ட ஆயிரக்கணக் கானோர் அந்த வழியாக சென்ற வாகனங்களை வழிமறித்து தாக்கி னர். ஆங்காங்கே நிறுத்தப்பட் டிருந்த கார், வேன், இரு சக்கர வாகனங்களையும், ஏடிஎம் இயந் திரங்களையும் உடைத்து தீ வைத் தனர். காடுகொண்டனஹள்ளி, தேவர் ஜீவனஹள்ளி, காவல் பைரசந்திரா ஆகிய காவல் நிலையங்களுக்கும் தீ வைத்தனர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகின.

மின் விநியோகத்தை துண்டித்து சாலையின் நடுவில் டயர், மரக் கட்டைகளை எரித்ததால் அந்த பகுதி கலவர பூமியாக காட்சி யளித்தது. இதனால் தீயணைப்பு வீரர்கள், மத்திய தொழில் பாது காப்பு படையினர், ரிசர்வ் போலீ ஸார் அங்கு வர தாமதமானது.

நள்ளிரவு 2 மணி அளவில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு நடந்தே வந்த போலீஸார், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர். அப்போது அவர்கள் திடீரென போலீஸார், பத்திரிகை யாளர்கள், பொதுமக்கள் மீது கட்டை, இரும்புக் கம்பி, பாட்டில், கற்களை கொண்டு தாக்கினர்.

இதையடுத்து போலீஸார் கண்ணீர் புகை குண்டுகள் வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தினரை கலைக்க முயற்சித்தனர். அப்போ தும் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முடியாததால் துப் பாக்கிச் சூடு நடத்தினர். இதில், வாஜித் கான் (20), யாஷீன் பாட்ஷா (20) உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.

வன்முறை தாக்குதலில் பெங் களூரு கிழக்கு மண்டல உதவி காவல் ஆணையர் பீமசங்கர் உள்ளிட்ட 60 போலீஸாரும், 7 பத்திரிகையாளர்கள் உட்பட 140 பொதுமக்களும் காயமடைந்தனர். 250-க்கும் அதிகமான வாகனங்கள் தீக்கிரையாயின.

இதுகுறித்து பெங்களூரு காவல் ஆணையர் கமல் பந்த் கூறிய தாவது:

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து பல கோணங்களில் விசாரணை நடத்தப்படும். பொதுச் சொத்துகளை சேதப்படுத்தி, போலீஸாரை தாக்கியதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

பிற பகுதிகளுக்கு வன்முறை பரவாமல் தடுப்பதற்காக பெங்க ளூரு மாநகரம் முழுவதும் ஊர டங்கு உத்தரவு அமல்படுத்தப்பட் டுள்ளது. அம்பேத்கர் சாலை, காடுகொண்டனஹள்ளி, காவல் பைரசந்திரா உள்ளிட்ட பகுதி களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மத வழிபாட்டுத் தலங்களுக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திட்டமிட்ட வன்முறை

உள்துறை அமைச்சர் பசவ ராஜ் பொம்மை கூறும்போது, ‘‘தற்போது நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கலவரம் நன்கு திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளது. இதன் பின்னணி யில் சில அரசியல் கட்சியினர் இருக் கின்றனர். 3 கவுன்சிலர்களுக்கு இந்த வன்முறையில் தொடர்பு இருக்கிறது. 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் திரண்டு வன்முறை யில் ஈடுபட்டுள்ளனர். சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் அவர்கள் அடையாளம் காணப்படுவர். மத வெறுப்பை தூண்டும் வகையில் பதி விட்ட நவீன் கைது செய்யப்பட்டு, அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. இதுதவிர வன்முறையில் ஈடுபட்ட 165 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதில் எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகி முஷாமில் பாஷாவும் ஒருவர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க மாவட்ட நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது" என்றார்.

உயிர் பிழைத்தது அதிசயம்

காங்கிரஸ் எம்எல்ஏ அகண்ட சீனிவாச மூர்த்தி கூறும்போது, ‘‘இந்த முகநூல் பதிவுக்கும் எனக் கும் எந்த சம்பந்தமும் இல்லை. என் தங்கை குடும்பத்தினருடன் நல்ல உறவு இல்லை. முகநூலில் கூட நான் இல்லை. யாரோ என் பெ யரில் போலி கணக்கு தொடங்கி இந்த சதி செயலை செய்துள்ளனர். என் வீட்டுக்கு தீ வைத்துள்ளனர். நல்ல வேளையாக நான் அங்கு இல்லை. கடவுளின் புண்ணியத் தால் உயிர் தப்பி இருக்கிறேன். என் குடும்பத்தினர் இன்னும் பயத்தோடு இருக்கின்றனர். இந்த கலவரத்தில் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் யாரும் என் தொகுதியை சேர்ந்தவர்கள் இல்லை’’ என்றார்.

இந்த கலவரத்துக்கு ஆளும் பாஜக, எதிர்க்கட்சியான காங்கிரஸ், மஜத உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

எஸ்டிபிஐ தலைவர் மறுப்பு

எஸ்டிபிஐ கட்சியின் கர்நாடக மாநில தலைவர் எலியாஸ் முகமது தும்பே கூறும்போது, ‘‘பெங்களூருவில் நடந்த வன்முறை சம்பவம் கண்டிக்கத்தக்கது. நவீன் மீது போலீஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் இந்த வன்முறையே ஏற்பட்டு இருக்காது. இந்த சம்பவத்துக்கும் எங்கள் கட்சி மற்றும் முஸ்லிம்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதில் எங்களை சிக்கவைக்க சதி நடக்கிறது.எங்கள் கட்சியை சேர்ந்த முஷாமில் பாஷா போலீஸாருடன் சேர்ந்து வன்முறையாளர்களை சாந்தப்படுத்தவே முயற்சித்தார். அதற்கான வீடியோ ஆதாரங்கள் இருக்கும் போது அவரை கைது செய்தது ஏன்’ என தெரிவித்தார்.

கண்டதும் சுட எடியூரப்பா உத்தரவு

கரோனா சிகிச்சை முடிந்து வீட்டில் ஓய்வெடுத்து வரும் முதல்வர் எடியூரப்பா, நேற்று காலை உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, காவல் துறை உயர் அதிகாரிகளுடன் காணொலி மூலம் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது எடியூரப்பா கூறியதாவது: இரவு 9 மணிக்கு சிறிய அளவில் தொடங்கிய இந்த பிரச்சினையை போலீஸார் ஏன் தொடக்கத்திலேயே தடுக்கவில்லை. பிரச்சினையின் தீவிரத்தை அறிந்து நடவடிக்கை எடுக்கத் தவறிய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து பெங்களூரு காவல் ஆணையர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடும் சமூக விரோதிகளை கண்டதும் சுட போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளேன். சமூக நல்லிணக்கத்தை பொதுமக்கள் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் எடியூரப்பா கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in