Published : 12 Aug 2020 09:22 PM
Last Updated : 12 Aug 2020 09:22 PM

கேரளாவில் கரோனா பாதித்தவர்களின் போன் விவரங்கள் சேகரிப்பு: முதல்வர் பினராயி விஜயன் பேட்டி 

கேரளாவில் கரோனா பாதித்தவர்களின் போன் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக, முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (புதன்கிழமை) திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியது:

''கேரளாவில் இன்று 1,212 பேருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில்தான் மிக அதிகமாக 266 பேருக்கு நோய் பரவியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக 261 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 121 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 118 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 93 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 81 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 76 பேர் கோட்டயம் மாவட்டத்தையும், 68 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 42 பேர் இடுக்கி மாவட்டத்தையும், 31 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், தலா 19 பேர் பத்தனம்திட்டா மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களையும், 12 பேர் வயநாடு மாவட்டத்தையும், 5 பேர் கொல்லம் மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.

கேரளாவில் 5 பேர் கரோனா பாதித்து மரணம் அடைந்துள்ளனர். ஆகஸ்ட் 3-ம் தேதி மரணமடைந்த காசர்கோடு மாவட்டம் ஹரிபுரம் பகுதியைச் சேர்ந்த 53 வயதான சம்சுதீன், 10-ம் தேதி மரணமடைந்த திருவனந்தபுரம் மாவட்டம் மரியபுரம் பகுதியைச் சேர்ந்த 50 வயதான கனகராஜ், 9-ம் தேதி மரணமடைந்த எர்ணாகுளம் மாவட்டம் அய்யயம்புழா பகுதியைச் சேர்ந்த 77 வயதான மரியம் குட்டி, ஜூலை மாதம் 31-ம் தேதி மரணமடைந்த இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான அஜிதன், ஆகஸ்ட் 6-ம் தேதி மரணமடைந்த கோட்டயம் மாவட்டம் காராப்புழா பகுதியைச் சேர்ந்த 89 வயதான வாசப்பன், கடந்த 2-ம் தேதி மரணமடைந்த காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயதான ஆதம் ஆகியோர் கரோனா பாதித்து மரணமடைந்தது பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனை மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து இதுவரை கேரளாவில் கரோனா பாதித்து மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 64 பேர் வெளிமாநிலங்களில் இருந்தும், 51 பேர் வெளிநாடுகளில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர்.

மேலும் இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 1,068 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியுள்ளது. இதில் 45 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது என தெரியவில்லை. திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று நோய் பரவிய 266 பேரில் 255 பேருக்குக் கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியது.

இன்று சுகாதாரத் துறையைச் சேர்ந்த 22 பேருக்கு நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் 9 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 880 பேர் இன்று குணமடைந்து தங்களது வீடுகளுக்குச் சென்று உள்ளனர். திருவனந்தபுரத்தில் மட்டும் 180 பேருக்கு நோய் குணமடைந்துள்ளது. இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 24,926 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவில் தற்போது 13,045 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் 1,51, 752 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,39,326 பேர் வீடுகளிலும், 12,426 பேர் பல்வேறு மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கரோனா நோய் அறிகுறிகளுடன் 1,380 பேர் பல்வேறு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 28,644 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சிபிநாட், ட்ரூநாட் உள்பட இதுவரை மொத்தம் 10,56,360 பல்வேறு வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்ட்டுள்ளன. இதில் 7,313 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. இதுதவிர சுகாதாரத் துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கம் உள்ள 1,41, 283 பேரிடம் இதுவரை பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ள. இதில் 1,049 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. இன்று நோய்த் தீவிரம் உள்ள பகுதிகளின் பட்டியலில் 30 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதையடுத்து கேரளாவில் தற்போது 540 நோய்த் தீவிரம் உள்ள பகுதிகள் உள்ளன. திருவனந்தபுரம் கடற்கரைப் பகுதிகளில் நோயின் தீவிரம் குறைந்து வருவதால் அங்கு வர்த்தக நிறுவனங்களை நிபந்தனைகளுடன் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீன் வியாபாரிகளிடையே கரோனா பரவுவதால் அவர்களுக்கும் நோய் பரிசோதனை நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கரோனா பாதித்தவர்களின் டெலிபோன் விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இவ்வாறு போன் விவரங்களைச் சேகரிப்பதன் மூலம் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை எளிதில் கண்டுபிடிக்க முடியும். இந்த விவரங்கள் எந்தக் காரணம் கொண்டும் முறைகேடாக பயன்படுத்தப்பட மாட்டாது. இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.

மூணாறு அருகே நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று மூன்று உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது. மூணாறில் மீட்புப் பணியில் ஈடுபட்ட ஆலப்புழாவைச் சேர்ந்த தீயணைப்புப் படை வீரர் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி நடத்தப்பட்ட பரிசோதனையில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த ஒருவருக்கும் நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் பத்திரிகைத் துறையில் பணிபுரியும் வாகன ஓட்டி ஒருவருக்கும் நோய் பரவியது தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டுள்ள 28 பத்திரிகையாளர்களுக்கும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 12 பேருக்கு நோய் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. மற்றவர்களின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதையடுத்து யாருக்கும் எப்படி வேண்டுமென்றாலும் நோய் பரவலாம் என்பது இதன் மூலம் தெரிய வந்துள்ளது. பத்திரிகைத் துறையில் பணிபுரியும் வாகன ஓட்டி ஒருவருக்கு நோய் பரவியதை அவருடன் தொடர்பில் இருந்த பத்திரிகையாளர்கள் அனைவரும் தனிமையில் சென்றுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் உடல்களைப் பிரேத பரிசோதனை நடத்துவதற்காக ராஜமலை மருத்துவமனையில் 5 மேஜைகள் போடப்பட்டுள்ளன. இங்கு 5 டாக்டர்கள் 4 நர்சுகள் மற்றும் 4 சுகாதாரத் துறை ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கேரளாவில்தான் கரோனா நோய்க்கு மிகக் குறைந்த கட்டணத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு மருத்துமனையில் அனைவருக்கும் இலவச சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களில் சிகிச்சைக் கட்டணம் மிக அதிகம் ஆகும். கேரளாவில் தற்போது கரோனா பரவல் சற்று அதிகமாக இருந்தாலும், மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது இங்கு நோய்ப் பரவல் குறைவாகும்.

முல்லைப் பெரியாறு அணையில் நேற்று அணைக் குழுவினர் பார்வையிட்டனர். அணையின் நீர்மட்டம் 136 அடியைத் தாண்டியதைத் தொடர்ந்து இந்தப் பரிசோதனை நடத்தப்பட்டது. அக்குழுவினர் முக்கிய அணை, பேபி அணை மற்றும் காலரி ஆகியவற்றைப் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மதகுகளின் உறுதித் தன்மையையும் அவர்கள் பரிசோதித்தனர்.

கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்தில் சிக்கியவர்களில் தற்போது 83 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 61 பேர் தற்போது நலமாக உள்ளனர். 22 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வரும் 24-ம் தேதி சட்டப்பேரவைக் கூட்டத் தொடரைத் தொடங்கத் தீர்மானிக்கப்பட்டது. இதுதொடர்பாகக் கவர்னரிடம் அனுமதி கோரவும் முடிவு செய்யப்பட்டது''.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x