இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்கிய கேரள அரசு 

இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயண் : கோப்புப்படம்
இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயண் : கோப்புப்படம்
Updated on
1 min read

1994-ம் ஆண்டில் பல்வேறு முக்கியஆவணங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக பொய்யாகத் தொடரப்பட்ட வழக்கில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடாக கேரள அரசு நேற்று வழங்கியது.

தவறானக் குற்றச்சாட்டின் அடிப்படையில் தன்னை கேரள அரசு சட்டவிரோதமாக கைது செய்து, கொடுமையப்படுத்தியதாக 78 வயதான விஞ்ஞானி நம்பி நாராயண் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் அவருக்கு இழப்பீடு வழங்கி வழக்கை முடித்துக்கொள்ள கேரள அரசு ஒப்புக்கொண்டது. அதன்அடிப்படையில் இழப்பீடு வழங்கப்பட்டது.

கடந்த 1994-ம் ஆண்டு, இஸ்ரோ தொடர்பான முக்கிய ரகசிய ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்றதாக இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்ட இரு விஞ்ஞானிகள், ஒரு மாலத்தீவு பெண் என 4 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர்.

ஏறக்குறைய இரு மாதங்கள் நம்பி நாராயண் கேரள சிறையில் இருந்தார். ஆனால், இந்தவழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை முடிவில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய்யானவை எனத் தெரியவந்தது.

ஆனால், இந்தவழக்கில் நம்பி நாராயண் சிறை செல்லக்காரணமாக இருந்த முன்னாள் போலீஸ் டிஜிபி சிபி மாத்யூ, ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர்கள் ஜோஷ்வா, விஜயன் ஆகியோர் மீது நடவடிக்கை ஏதும் தேவையில்லை என கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இதை எதிர்த்து நம்பி நாராயண் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து தன்னை தவறான குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை கோரியும், மனஉளைச்சலுக்கு இழப்பீடு கோரியும் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கின் விசாரணையில் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணுக்கு ரூ.1.30 கோடி இழப்பீடு வழங்க கேரள அரசு ஒப்புக்கொண்டதால் வழக்கு முடிக்கப்பட்டது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் கடந்த ஆண்டு முதல் கட்டமாக ரூ.50 லட்சம் வழங்கப்பட்டது.

இதுதவிர தேசிய மனித உரிமைகள் ஆணையம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் மீதம் வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை கேரள அரசு நம்பி நாராயணுக்கு நேற்று வழங்கிவிட்டதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in