Last Updated : 12 Aug, 2020 02:22 PM

 

Published : 12 Aug 2020 02:22 PM
Last Updated : 12 Aug 2020 02:22 PM

ரஷ்யாவின் கரோனா தடுப்பூசி இந்தியர்கள் உடலில் வேலை செய்தால் நாம் அதிர்ஷ்டசாலிதான் ; பாதுகாப்பானது இல்லை கவனம் தேவை: சிசிஎம்பி இயக்குநர் கருத்து

கோப்புப்படம்

ஹைதராபாத்


ரஷ்யா தயாரித்துள்ள கரோனா வைரஸ் தடுப்பு மருந்தின் எந்தவிதமான புள்ளவிவரங்களும் தெரியாத போது, அது செயல்படும்முறை, பாதுகாப்பு குறித்து யாராலும் கணிக்க முடியாது என்று சிஎஸ்ஐஆர் அமைப்பின் செல்லுலார் அன்ட் மாலிகுளர் பயாலஜி அமைப்பின் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு பல்வேறு நிலையை எட்டியுள்ளன. ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், அமெரிக்காவின் கேய்சர் போன்ற நிறுவனங்கள்தான் கரோனா தடுப்பு மருந்தின் 3-வது கட்டத்தில் நுழைந்து மனிதர்களுக்கான கிளினிக்கல் பரிசோதனையை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்த சூழலில் கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துவிட்டதாக ரஷ்யா நேற்று அறிவித்தது. உகிலேயே முதல்நாடாக கரோனாவுக்கு தடுப்பு மருந்தை ரஷ்யா கண்டுபிடித்துள்ளதாக அந்நாட்டின் அதிபர் விளாதிமிர் புதின் அறிவித்தார்.

ரஷ்யாவின் கமலேயா தேசிய ஆய்வு மைம் மற்றும் தொற்றுநோய் தடுப்பு மற்றும் நுண்ணுயிரியல் பிரிவு ஸ்புட்னிக்-5 எனும் கரோனா தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.

கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக ஒருபுறம் ஆறுதல் அடைந்தாலும், ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பு மருந்தின் நம்பகத்தன்மை, புள்ளிவிவரங்கள், எத்தனை கிளினிக்கல் பரிசோதனை நடத்தப்பட்டது, அதன் செயல்திறன் குறித்து யாருக்கும் தெரியாது.

இதுகுறித்து சிஎஸ்ஐஆர் அமைப்பின் செல்லுலார் அன்ட் மாலிக்ளர் பயாலஜி அமைப்பின் இயக்குநர் ராகேஷ் கே. மிஸ்ரா பிடிஐ நிருபருக்கு இன்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

“ ரஷ்யா தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்து இந்தியர்கள் உடலில் திறம்பட செயல்பட்டால் நாம் அதிர்ஷ்டசாலிதான்.

ரஷ்யா தயாரித்துள்ள கரோனா தடுப்பு மருந்தின் செயல்திறன், பாதுகாப்பு பற்றி இதுவரை யாருக்கும் தெரியாது. அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் முறையாக 3-வது கட்ட கிளினிக்கல் பரிசோதனையை மக்கள் மீது நடத்தவில்லை.

தடுப்பு மருந்தின் செயல்திறனை அறிய வேண்டுமானால், மிகப்பெரிய மக்கள் கூட்டத்தில் அந்த மருந்தை செலுத்தி 2 மாதங்களாவது காத்திருக்க வேண்டும். தடுப்பூசி செலுத்தப்பட்ட மக்கள் எவ்வாறு இருக்கிறார்கள், நோய்தொற்றுக்கு ஆளாகிறார்களா, இல்லையா, வேறு ஏதாவது பாதிப்பு வருகிறதா என்பதை கண்டறிய வேண்டும்.

ரஷ்யா தாங்கள் தயாரித்த கரோனா தடுப்பு மருந்தை மிகப்பெரிய அளவில் மக்களுக்கு கொடுத்து பரிசோதித்தார்களா எனத்தெரியாது. அவ்வாறு பரிசோதித்திருந்தால், புள்ளிவிவரங்கள் கிடைக்க வேண்டும். எதையும் ரகசியமாக வைத்துக்கொண்டு மருந்துகளை வெளியிட முடியாது.

ரஷ்யா தயாரித்துள்ள கரோனாதடுப்பு மருந்தை நாம் மிகவும் கவனத்துடன் மதிப்பீடு செய்துதான் மக்களுக்கு வழங்க முடியும். எந்த நாடும், எந்த நிறுவனமும் கரோனா தடுப்பு மருந்து அறிமுகம் செய்யும் புள்ளிவிவரங்களை வெளியிடாமல் இருந்தால் அது மோசமானதாக இருக்கும்.

ரஷ்ய கரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது அல்ல. கிளினிக்கல் பரிசோதனையின் 3 கட்டங்கள்வரை தடுப்பு மருந்து பரிசோதிக்கப்படாமல் எந்த நாடும் தடுப்பு மருந்தை அனுமதிப்பதில்லை.

கடந்த 2 மாதங்களுக்கு முன் ரஷ்யா அரசு ஒரு சட்டத்தை இயக்கிறது. அதன்படி மிகவிரைவாக கரோனா தடுப்பு மருந்தை தயாரிக்க வேண்டும் என்று தீர்மானித்தது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் கரோனா தடுப்பு மருந்துகளின் கிளினிக்கல் பரிசோதனையில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியாகவி்ல்லை. ஆகஸ்ட் இறுதி அல்லது செப்டம்பர் முதல்பாதியில் வெளியாகும் என்று நம்புகிறேன்.

முதல்கட்டம் மற்றும் 2-ம் கட்ட பரிசோதனையின் முடிவுகள் வரவேற்கக்கூடியதாக இருக்கும் என்பதில் எனக்கு வியப்பேதும் இல்லை. ஏனென்றால், பல தடுப்பு மருந்துகள் 2 கட்டங்களைக் கடந்து விட்டன. தற்போது 3-வது கிளினிக்கல் பரிசோதனையில் இருக்கிறோம்.

இவ்வாறு ராகேஷ் தெரிவித்தார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x