Published : 12 Aug 2020 01:19 PM
Last Updated : 12 Aug 2020 01:19 PM

‘‘நண்பர்கள் திரும்பி வந்துள்ளனர்; இணைந்து பணியாற்றுவோம்’’ - அசோக் கெலாட் உறுதி

நண்பர்கள் மீண்டும் திரும்பி வந்துள்ளனர். நாங்கள் இணைந்து பணியாற்றுவோம் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறினார்.

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் முதல்வராக இருக்கும் அசோக் கெலாட்டுக்கும், துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட்டுக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டது.

காங்கிரஸ் கூட்டங்களில் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்எல்ஏக்கள் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியதால், 19 பேரையும் கட்சியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுத்தனர். ஆனால், சபாநாயகர் நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சச்சின் பைலட் தொடர்ந்த வழக்கில் நடவடிக்கை எடுக்கத் தடை விதிக்கப்பட்டது.

இந்தச் சூழலில் தனக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதை முதல்வர் அசோக் கெலாட் முடிவு செய்தார். ஆளுநர் மிஸ்ரா ஆகஸ்ட் 14-ம் தேதி பேரவையைக் கூட்ட உத்தரவிட்டுள்ளார்.

இந்தச் சூழலில் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இருவரையும் தனியே சந்தித்துப் பேசினார்.

ராஜஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ள சூழலில் இந்த மூன்று தலைவர்களின் சந்திப்பு சுமுகமான மாற்றத்தை உருவாக்கியது.

ராஜஸ்தான் அதிருப்தி காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் எழுப்பியுள்ள பிரச்சினை குறித்து விவாதிக்க 3 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை நியமிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்துள்ளார். இதனால் சச்சின் பைலட் கட்சிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து சச்சின் பைலட் ஜெய்ப்பூர் திரும்பினார். ஜெய்சால்மரில் தங்க வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களும் ஜெய்ப்பூர் திரும்பி வருகின்றனர்.

இந்தநிலையில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இதுகுறித்து கூறியதாவது:

‘‘எம்எல்ஏக்கள் அதிருப்தியடைவது இயல்பு தான். அவர்கள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பிரிந்து சென்று தனித்து இருந்தனர்.

நாட்டிற்கும், மக்களுக்கும், மாநிலத்திற்கும் சேவை செய்ய வேண்டுமென்றால், ஜனநாயகத்தை காக்க வேண்டும் என்றால் இதுபோன்ற விஷயங்களை பொறுத்துக் கொள்ள வேண்டும் என அவர்களிடம் விளக்கியுள்ளோம்.

எங்கள் நண்பர்கள் மீண்டும் திரும்பி வந்துள்ளனர். நாங்கள் இணைந்து பணியாற்றுவோம். எங்களுக்குள் இருந்த வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து விட்டு மாநிலத்திற்காக பணியாற்றுவோம்.’’ எனக் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x