வீடுதோறும் பசுமாடு வளர்ப்பு; பால் விற்பனை மட்டும் இல்லை; தேவையானவர்களுக்கு இலவசம்: மகாராஷ்டிராவில் வினோத கிராமம்

பிரதிநித்துவப்படம்
பிரதிநித்துவப்படம்
Updated on
2 min read


மகாராஷ்டிார மாநிலம், ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வீடு தோறும் மக்கள் பசுமாடு வளர்த்தபோதிலும் யாரும் விலைக்கு பாலை விற்பனை செய்வது இல்லை. தேவையானவர்களுக்கு பாலை இலவசமாக வழங்குகிறார்கள்.

ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள யேலேகான் கவாலின் எனும் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்களை கடவுள் கிருஷ்ணரின் வழி வந்தவர்கள் என்று நம்புகின்றனர். இதனால் ஒருபோதும் பாலை விலைக்கு விற்பனை செய்வது இல்லை. மாறாக எந்த கிராமத்தைச் சேர்ந்த மக்களும் தங்களின் வீட்டுத் தேவைக்கு பால் கேட்டு வந்தால் தயங்காமல் இலவசமாக அளிக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் ஒரு பகுதி விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள் பாலுக்கு உரிய விலை கேட்டு அரசிடம் போராடி வரும்நிலையில் பாலை விற்பனை செய்யாமல் ஒரு கிராமம் இருப்பது வியப்பாக இருந்து வருகிறது.

இதுகுறித்து யேலேகான் கவாலி கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராஜாபாபு மன்தாதே(வயது60) நிருபரிடம் கூறுகையில் “ எங்களின் கிராமத்தின் பெயரே(யேலேகான் கவாலி) பால்காரர் கிராமம் என்றுதான் பெயர். ஆனால், கிராமத்தில் 90 சதவீதம் வீடுகளில் பசு மாடு வளர்க்கிறோம். ஒருவர் கூட பாலை விலைக்கு விற்பனை செய்யமாட்டோம்.

பிரதிநிதித்துவப்படம்
பிரதிநிதித்துவப்படம்

நாங்கள் அனைவரும், எங்கள் மூதாதையர்கள் அனைவரும் கடவுள் கிருஷ்ணரின் பரம்பரையைச் சேர்ந்தவர்கள். ஆதலால், பாலை ஒருபோதும் விலைக்கு விற்க மாட்டோம். மாறாக, நாங்கள் தேவையுள்ளவர்களுக்கு இலவசமாக வழங்குவோம். பால் விற்பனை செய்வதில்லை என்றும் பாரம்பரியத்தை நூற்றாண்டுகளாக நாங்கள் பின்பற்றி வருகிறோம்.

பால் உற்பத்தி அளவுக்கு அதிகமாக இருந்தால், பால் மூலம் கிடைக்கும் மற்ற பொருட்களான தயிர், வெண்ணெய், நெய் போன்றவற்றை தயாரிப்போம். ஆனால், அதையும் விலைக்கு விற்கமாட்டோம். மக்கள் யார் வந்து கேட்டாலும் இலவசமாக வழங்குவோம்.

கிருஷ்ணஜெயந்தி எங்கள் ஊரில் மிகச்சிறப்பாகக் கொண்டாடப்படும், கிருஷ்ணர் கோயிலில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் என பிரமாண்டமாக இருக்கும். ஆனால், கரோனா வைரஸ் காரணமாக இந்தஆண்டு அனைத்தும் ரத்து செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்

யேலேகான் கவாலி கிராமத்தின் தலைவர் சாயிக்கவுசர் கூறுகையில் “ ஒவ்வொருவரும் தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தின் அடிப்படையில் இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் பாலை விலைக்கு விற்பதில்லை.

இந்த கிராமத்தில் இந்துக்கள், முஸ்லிம்கள், பிற மதத்தினரும் இருக்கிறார்கள். ஆனால், யாரும் பசுமாட்டிலிருந்து கிடைக்கும் பாலை விற்கமாட்டார்கள். 550 வீடுகளில் சொந்தமாக பசுமாடு, எருமை மாடுகள், ஆடுகள் இருக்கின்றன. ஆனால், இதுவரை ஒருவர்கூட பாலை விலைக்கு விற்றதில்லை” எனத் தெரிவி்த்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in