Last Updated : 12 Aug, 2020 09:22 AM

 

Published : 12 Aug 2020 09:22 AM
Last Updated : 12 Aug 2020 09:22 AM

கிழக்கு லடாக் எல்லை விவகாரம்: நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழு முன் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத் விளக்கம் 


கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீனா ராணுவத்துக்கும் இடையிலான மோதல் குறித்து நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவிடம் தலைமை பாதுகாப்பு அதிகாரி பிபின் ராவத் விளக்கம் அளித்துள்ளார்.

அப்போது, எல்லையில் எந்தவிதமான அசாதாரண சம்பவங்களையும், சூழலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது. குறிப்பாக கடும் குளிர்காலத்தில் நடக்கும் போரைக் கூட தாங்குவதற்கு தயாராக இருக்கிறது என்று பிபின் ராவத் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழுவின் தலைவராக காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

லடாக் எல்லை, சியாச்சின் போன்ற உயரமான இடங்களில் பணியாற்றும் இந்திய ராணுவத்துக்கு உடைகள் வாங்கியது தொடர்பாக நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு முன் விளக்கம் அளிக்க பாதுகாப்பு தலைமை அதிகாரி பிபின் ராவத் உள்ளிட்ட சில ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று முன்தினம் சென்றனர்.

இந்த சந்திப்பின்போது, கிழக்கு லடாக் எல்லையில் இந்தியா, சீன ராணுவத்துக்கும் இடையே நடந்த பிரச்சினை, இந்திய ராணுவம் எல்லையில் எவ்வாறு தயாராக இருக்கிறது என்பது குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக்குழுவின் பல்வேறு உறுப்பினர்கள், பிபின் ராவத்திடம் கேள்விகள் கேட்டு விளக்கம் கேட்டுள்ளனர்.

அப்போது விளக்கம் அளித்த பிபின் ராவத் “ எல்லையில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள், அசாதாரண சூழல்கள் ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக இருக்கிறது.

நீண்டகாலம் நடக்கும் போராக இருந்தாலும், கடும் குளிர், பனியையும் தாங்கும் வல்லமையும், மன உறுதியும் ராணுவத்தினருக்கு இருக்கிறது என்று திட்டவட்டமாக தெரிவித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த ஜூன் 15-ம் தேதி இந்திய , சீன ராணுவத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்தியத் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள், சீனத் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவத்தால் எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் பலச்சுற்றுப் பேச்சு நடத்தப்பட்டு பதற்றம் தணிக்கப்பட்டது. மேலும், சீன, இந்திய தூதரக அளவில் பேச்சு நடத்தப்பட்டது. இந்தியத் தரப்பில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் யாவ் வி ஆகியோர் நடத்திய பேச்சுக்கு பின் எல்லையில் இரு நாட்டு படைகளும் விலகிச் செல்ல ஒப்புதல் தெரிவித்தன.

சீன ராணுவத்தினர் கல்வான் பள்ளத்தாக்குப் பகுதி உள்ளிட்ட பதற்றமான பகுதிகளில் இருந்து படைகளை வாபஸ் பெற்றபோதிலும், பாங்காங் சோ, கோக்ரா, தேப்சாங் ஆகிய பகுதிகளைவிட்டும் செல்ல வேண்டும என்று இந்தியத் தரப்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக பிங்கர் 4, பிங்கர்8 பகுதியிலிருந்து முழுமையாக சீன ராணுவத்தினர் செல்ல இந்தியா வலியுறுத்தி வருகிறது.

இருப்பினும் எல்லையில் எந்த சூழலையும் எதிர்கொள்ளும் நோக்கில் ராணுவத்தின் வலிமையை இந்தியா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. லடாக் பகுதியில் எதிர்வரும் கடும் குளிர்காலத்தை எதிர்கொள்ளும் வகையில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x