

உத்தரபிரதேசத்தில் ராமருக்கு இணையாக பரசுராமரை தூக்கிப் பிடிக்கும் எதிர்க்கட்சிகள் விவகாரத்தில் அகில இந்திய சாதுக்கள் சபை கண்டனம் தெரிவித்துள்ளது. அவதாரப் புருஷர்களை பிரித்து இந்து மதத்தை வலுவிழக்கச் செய்ய சதி நடைபெறுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
உ.பி.யில் ராமர் கோயிலுக்கான பூமி பூஜைக்குப் பிறகு பிராமணர் சமூக வாக்குகளை கவரும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்கியுள்ளன. இதனால் ராமருக்கு இணையாக, விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான பரசுராமரை எதிர்க்கட்சிகள் தூக்கிப் பிடிக்கத் தொடங்கியுள்ளன. இந்த விவகாரத்தில் நாட்டின் சாதுக்களின் உயரிய சபையாகக் கருதப்படும் அகில பாரதிய அகாடா பரிஷத் கண்டனம் தெரிவித்துள்ளது. இது அவதாரப் புருஷர்களை பிரித்து இந்து மதத்தை வலுவிழக்கச் செய்யும் என குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து இந்த அமைப்பின் தலைவரான மஹந்த் நரேந்திர கிரி கூறும்போது, “கடவுளின் அவதாரங்களை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு சொந்தமானதாக கருதுவது தவறு. இந்த அவதாரங்கள் அனைத்தும் அனைவரின் வணக்கத்திற்கு உரியவை. இவற்றை சமூக அடிப்படையில் பிரிப்பது இந்து மதத்தை வலுவிழக்கச் செய்வதாகும்” என்றார்.
இந்தப் பிரச்சினையில் எந்த அரசியல் கட்சியின் பெயரையும் மஹந்த் கிரி குறிப்பிடவில்லை. அவதாரப் புருஷர்களால் நாட்டில் சனாதன தர்மத்தினரை இணைக்க வேண்டுமே தவிர பிரிக்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மஹந்த் கிரி கூறும்போது, “ராமருக்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் கட்டப்படுகிறது. இது நம் நாட்டுக்கு மட்டுமின்றி உலகத்துக்கே உற்சாகமூட்டியுள்ளது. இந்தச் சூழலில் சில கட்சிகள் இந்து கடவுள்களை சாதிவாரியாகப் பிரித்து அரசியல் லாபம் பெற முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது” என்றார்.
உ.பி.யில் சமாஜ்வாதி கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 75 மாவட்டங்களிலும் பரசுராமர் சிலை வைக்கப்படும் என அக்கட்சி கூறியது. உடனே, "பரசுராமருக்கு சமாஜ்வாதியை விட உயரமான சிலை அமைப்போம்" என மற்றொரு எதிர்க்கட்சியான பகுஜன் சமாஜும் கூறியது. இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சி, பரசுராமர் ஜெயந்திக்கு மீண்டும் அரசு விடுமுறை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.