

கர்நாடகாவில் கடந்த இரு வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஹுசங்கினியைச் சேர்ந்த தொப்பன்னா (20) கடந்த சில தினங்களுக்கு முன்பு எடதமாலி கிராமத்துக்கு ஆடு மேய்க்கச் சென்றார். தொடர் மழையினால் கிருஷ்ணா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் அந்த கிராமத்துக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு தீவாக மாறியது.
அங்கு சிக்கிய ஆடு மேய்க்கும் இளைஞரைக் (ஆயன்) காப்பாற்ற முடியாமல் கடந்த 3 நாட்களாக ஹூசங்கினி பகுதியினர் சிரமப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ரப்பர் படகு மூலம் கிருஷ்ணா ஆற்றை கடந்து சென்று 6 மணி நேரப் போராட்டத்துக்கு பின் தொப்பன்னாவையும், அவரது நாய் மற்றும் ஆடுகளையும் மீட்டனர்.
படகில் செல்ல நாயை மடியில் வைத்து கட்டியணைத்தவாறு இருக்கும் இளைஞரின் படத்தை மீட்புப் படை அதிகாரி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், "இந்த படம் என் நெஞ்சை தொட்டது. வெள்ளத்தில் சிக்கிய இந்த ஆடு மேய்க்கும் இளைஞரை காப்பாற்றினோம். தன் ஆடுகளை விட்டு வருவதால் மிகுந்த சோகத்துடன் இருந்தார். ஆடுகளை விட்டு வந்தவர், அந்த நேரத்தில் ஓடிப்போய் தன் செல்ல நாயை தூக்கிக் கொண்டு படகில் ஏறினார். அவருக்கு உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என கூறியுள்ளார்.