

பக்ரீத் பண்டிகை வருவதால், வரும் 25-ம் தேதி மற்றும் அதற்கு அடுத்து இரு தினங்களுக்கு மாடு வதை மற்றும் இறைச்சி விற்பனை மீதான தடையை தளர்த்தக் கோரி 9 மனுக்கள் தனித்தனியாக தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
விநியோக் என்ற தொண்டு நிறுவனம் தடைக்கு ஆதரவாக தாக்கல் செய்த மனு ஆகிய மனுக்களை மும்பை உயர் நீதிமன்றம் ஒன்றாகச் சேர்த்து நேற்று விசாரித்தது. நீதிபதிகள் அபே ஓகா, வி.எல். அச்லியா ஆகியோரடங்கிய அமர்வு முன்பு இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன.
பிரதான மனுவில், தற்போ தைய மகாராஷ்டிர விலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி, வேளாண்மை, இனப்பெருக்கம் உள்ளிட்ட எவ்வித பணிகளுக்கும் பயன்படாத எருது, காளைகள் என சான்றளிக்கப்பட்டவற்றை இறைச்சிக்காக பலியிடுவது என்பது அனுமதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பக்ரீத் பண்டிகைக்காக பசுவைத் தவிர்த்து, காளை அல்லது எருதை பலியிடும் வகையில் தடையை மூன்று நாட்கள் தளர்த்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், “ஜெயின் சமூகத்துக்காக அனைத்துவித இறைச்சி விற்பனைக்கும் இரு நாட்கள் தடை விதித்து சுற்றறிக்கை வெளியிட்ட நிலையில், முஸ்லிம் சமூகத்துக்காக தடையைத் தளர்த்தி ஏன் சுற்றறிக்கை வெளியிடக் கூடாது” என கேள்வியெழுப்பப்பட்டது.
அரசு தரப்பில், அட்டர்னி ஜெனரல் (பொறுப்பு) அனில் சிங் ஆஜரானார். அவர் வாதிடும்போது, “பிராதன சட்டத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால் மூன்று நாட்கள் தளர்வு அளிக்கக்கூடாது. மேலும், அந்த மத சம்பிரதாயப்படி இதர விலங்குகளைப் பலியிடவும் அனுமதி உள்ளது. காளை அல்லது எருதை பலியிடுவது கட்டாயம் அல்ல” என வாதிட்டார்.
இதைத்தொடர்ந்து, “மாநில அரசின் சட்டப்பூர்வ அதிகாரத்தின் மீது இடைக்காலத் தளர்வு அளிக்க முடியுமா? இச்சட்டத்தின் கீழ் தளர்வு அளிக்க அதிகாரம் இருக்குமானால், அதுதொடர் பாக பரிசீலிக்க அரசைக் கேட்டுக் கொள்வோம். இந்த சூழலில், தடையைத் தளர்த்த முடியாது” என நீதிபதிகள் தெரிவித்தனர்.