Published : 11 Aug 2020 02:37 PM
Last Updated : 11 Aug 2020 02:37 PM

கரோனா பாதிப்புடன் அறுவை சிகிச்சை; பிரணாப் முகர்ஜிக்கு ஆபத்தான கட்டத்தில் தீவிர சிகிச்சை

கோப்புப் படம்

புதுடெல்லி

டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு அறுவை சிகிச்சை நடந்துள்ள நிலையில் கரோனா பாதிப்பும் இருப்பதால் அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தப்பட்டுள்ளது. ஆபத்தான கட்டத்தை அவர் தாண்டவில்லை என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களும் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அர்ஜுன் ராம் மேக்வால், தர்மேந்திர பிரதான், விஸ்வாஸ் சாரங், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், கர்நாடக முதல்வர் எடியூரப்பா, பி.ஸ்ரீராமுலு, கர்நாடக வேளாண் அமைச்சர் பி.சி.பாட்டீல், கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா, கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டனர்.

இந்தியாவில் கடந்த 2012 முதல் 2017-ம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராகப் பதவி வகித்த பிரணாப் முகர்ஜியும் கரோனாவில் பாதிக்கப்பட்ட செய்தி வெளியானது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு தற்போது வயது 84. முதுமை காரணமாக உடல் பலவீனமான நிலையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் டெல்லியிலுள்ள, தனது வீட்டுக் கழிவறையில் அவர் வழுக்கி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. அப்போது தலையில் அடிபட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக அவர் டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையின் போது கொரானா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட செய்தியில், “வேறு ஒரு தனி நடைமுறைக்கு மருத்துவமனைக்குச் சென்றபோது நான் கரோனா பரிசோதனை செய்துகொண்டேன். அதில் எனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஆதலால், கடந்த வாரத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்’’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

பிரணாப் முகர்ஜி விரைவில் குணமடைய காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள், பல்வேறு மூத்த தலைவர்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக வாழ்த்துத் தெரிவித்து வந்தனர்.

நேற்று பிரணாப் முகர்ஜியின் மூளையில் உறைந்திருந்த ரத்தத்தை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவருக்கு வென்டிலேட்டர் பொருத்தப்பட்டு ஐசியூ பிரிவில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளார்.

கரானா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருந்திருந்தால் செயற்கை சுவாசத்தின் தேவை இருந்திருக்காது என தெரிகிறது.

உடல் மூப்பு, அறுவை சிகிச்சை மற்றும் கரோனா வைரஸ் பாதிப்பு போன்றவற்றின் காரணமாக பிரணாப் முகர்ஜி உடல்நிலை சற்று ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகவும் எனினும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x