

உறவினரான மாமனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் கீழே விழுந்து பரிதாபமாகப் பலியாகி உள்ளார். பின்னால் புல்லட்டில் வந்த இரு இளைஞர்களால் இவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானதால் இந்த சம்பவம் நிகழ்ந்ததாகப் புகார் எழுந்துள்ளது.
உ.பி.யின் கவும்தம்புத்நகர் மாவட்டம் தாத்ரியை சேர்ந்தவர் சுதிக்ஷா பாட்டி(20). இவர் ரூ.4 கோடி உதவித்தொகையுடன் அமெரிக்காவிலுள்ள பாப்சன் கல்லூரியில் பயின்று வருகிறார்.
கரோனாவால் தம் வீடு வந்தவர், நேற்று தனது மாமன் சத்யேந்தர் பாட்டியுடன் அருகிலுள்ள புலந்த்ஷெரில் தம் உறவினர் வீடு சென்று இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது திடீர் என ஏற்பட்ட விபத்தில் வாகனத்தில் இருந்து விழுந்த சுதிக்ஷா, தலையில்பட்ட காயத்தால் பரிதாபமாகப் பலியானார்.
இது குறித்து புலந்த்ஷெர் நகர எஸ்பியான அதுல்குமார் ஸ்ரீவாத்ஸவா கூறும்போது, ‘நெடுஞ்சாலையில் சென்ற பைக்குடன் பின்னால் வந்த புல்லட் மோதியதால் ஏற்பட்ட விபத்தில் அப்பெண் பலியாகி உள்ளார். அவரது உடல் உடற்கூறு ஆய்விற்காக அனுப்பப்பட்டுள்ளது. இதில் பாலியல் துன்புறுத்தல் நடந்ததாக பெற்றோர் தரப்பில் எங்களிடம் எந்த புகாரும் வரவில்லை’ எனத் தெரிவித்தார்.
இது சாதாரணமான விபத்து என வெளியான சம்பவத்தின் பின்னணியில் பாலியல் துன்புறுத்தல் காரணம் எனப் புகார் எழுந்துள்ளது. இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை இரண்டு இளைஞர்கள் புல்லட்டில் பின் தொடர்ந்து சுதிக்ஷாவை கேலி செய்துள்ளனர்.
சுதிக்ஷாவின் கவனத்தை ஈர்க்க தம் புல்லட்டில் சாகசங்கள் செய்தும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் திடீர் என ஏற்பட்ட விபத்து சுதிக்ஷாவின் உயிரையே பலி வாங்கியுள்ளது.
இது குறித்து சுதிக்ஷாவின் தந்தையான ஜிதேந்திர பாட்டி கூறும்போது, ‘இவ்வழக்கில் இதுவரை வழக்கும் பதிவாகவில்லை, போலீஸாரும் எங்களை தொடர்பு கொள்ளவில்லை. போலீஸார் கூறுவது போல் இது விபத்து அல்ல, கொலை.
இது அப்பகுதியை சேர்ந்தவருகளுக்கு நன்கு தெரியும். இவ்வழக்கில் இப்போது வரை ஒரு குற்றவாளியும் கைதுசெய்யப்படவில்லை.’ எனத் தெரிவித்தார்.
சாதாரணமான குடும்பத்தை சேர்ந்த சுதிக்ஷாவின் தந்தை சாலையோரம் தாபா நடத்தி வருகிறார். தாத்ரியின் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை பயின்ற சுதிக்ஷா சிறந்த படிப்பாளியாக இருந்துள்ளார்.
அப்பகுதியில் ஹெச்சிஎல் பவுண்டேஷன் நிறுவனம் நடத்தி வரும் ஆங்கிலப்பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர்வதற்கான நுழைவுத்தேர்விலும் நல்ல மதிப்பெண் பெற்று இணைந்தார். அதன் பிறகு பட்டப்படிப்பிற்காக ரூ.3.8 கோடி உதவித்தொகை பெற்றவர் அமெரிக்கக் கல்லூரியில் பயின்று வருகிறார்.
வரும் ஆகஸ்ட் இல் மீண்டும் அமெரிக்கா திரும்ப இருந்தவருக்கு இந்த பரிதாபம் நிகழ்ந்துள்ளது. இதன் மீது பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தன் டிவிட்டர் பக்கத்தில், ‘இதுபோன்ற சம்பவங்களால் உ.பியின் பெண்களால் எப்படி முனேற முடியும்? சுதிக்ஷா மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உ.பி அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக் குறிப்பிட்டுள்ளார்.
இப்பிரச்சனையில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் ஆகிய எதிர்கட்சிகளும் உ.பி அரசு கடுமையாக விமர்சித்துள்ளனர்.