

கரோனா பரவலை கட்டுப்படுத்தும் பணிகள் குறித்து தமிழக முதல்வர் பழனிசாமி உட்பட 10 மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ம் தேதி நள்ளிரவு முதல் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. 7-ம் கட்டமாக ஆகஸ்ட் 31-ம் தேதி நள்ளிரவு வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரிக்கிறது. நேற்றைய நிலவரப்படி 22 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 69.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கை 2 சதவீதமாக குறைந்துள்ளது.
ஒவ்வொரு முறையும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் முன்னர், மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில், கரோனா பாதிப்பு அதிகரித்துள்ள தமிழகம் உள்ளிட்ட 8 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் ராஜ்நாத், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கரோனா பரவலை தடுக்கும் நடவடிக்கை குறித்தும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி விவாதித்தார். தங்கள் மாநிலங்களில் உள்ள நிலவரம் குறித்து பல்வேறு முதல்வர்களும் கருத்துக்களை எடுத்துரைத்தனர்.
முதல்வர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையில் பிரதமரின் அடுத்தகட்ட அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.