

முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியின் 3 வருடங்களில் உத்திரப்பிரதேசத்தில் சுமார் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டிருப்பதாக் காங்கிரஸ் புகார் எழுப்பியுள்ளது. இப்புகார், ராமர் கோயிலுக்காக நடைபெற்ற பூமி பூஜையின் தாக்கமாகப் பார்க்கப்படுகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் பூமி பூஜை நடைபெற்றது முதல் உ.பி.யில் பிராமண சமூகம் மீதான அரசியல் அதிகரித்துள்ளது. இதில் ராமருக்கு ஈடாக பரசுராமரை எதிர்கட்சிகள் தூக்கிப் பிடிக்கத் துவங்கி விட்டன.
இந்தவரிசையில் தனித்திருக்காத காங்கிரஸும் பரசுராமர் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது. 2007 இல் நிலவிய சமாஜ்வாதி ஆட்சியில் பரசுராமர் ஜெயந்திக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதை பாஜக ஆட்சிக்கும் வந்தவுடன் ரத்து செய்ததாகவும் அதை மீண்டும் அறிவிக்க வேண்டும் எனவும் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. இதற்காக, காங்கிரஸ் புதிதாக அமைத்த ’பிராமின் சேத்னா சமிதி’ எனும் அமைப்பின் தலைவரான ஜிதின் பிரசாத், முதல்வர் யோகிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
பிராமண சமூகத்தினருக்கு ஆதரவு குரல் தரும் வகையில் பேசிய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அன்ஷு அவஸ்தி, ‘பரசுராமர், சனாதன தர்மத்தை பின்பற்றுபவர்களுக்கு, பிராமணர்களுக்கும் முக்கியக் கடவுளாக உள்ளார்.
முதல்வர் யோகி ஆட்சியில் கடந்த 3 வருடங்களில் சுமார் 700 பிராமணர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அரசு ஆதரவில்லாமல் இது சாத்தியமா? பிராமணக் குடும்பங்கள் உயிருடன் எரிக்கப்பட்டபோது சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சிகளும் எங்கிருந்தன?’ எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதனிடையே, கான்பூரில் தம்மை பிடிக்க வந்த 8 போலீஸாரை சுட்டுக் கொன்ற ரவுடியான விகாஸ் துபேயும் ஒரு பிராமணர் என்பதும் அரசியலாக்கப்பட்டு வருகிறது.
கான்பூர் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட துபே விவகாரமும் உ.பி அரசியலில் எழும்பத் துவங்கி விட்டது.
உ.பி.யில் சுமார் 12 சதவிகிதமாகப் பிராமணர் வாக்குகள் உள்ளன. துவக்கத்தில் காங்கிரஸிடம் இருந்தவை பாஜகவின் பக்கம் சாய்ந்தன.
இடையில் மாயாவதியுடன் ஒருமுறை சென்றவர்கள் மீண்டும் பாஜகவிடம் தங்கி விட்டனர். இந்தநிலை, ராமர் கோயில் பூமி பூஜைக்கு பின் நிரந்தரமாகி விடும் என எதிர்கட்சிகள் அச்சமடைந்துள்ளன.
இதன் காரணமாக, பிராமணர்களுக்கு ஆதரவானப் பிரச்சனைகளை எழுப்பி அரசியல் செய்யத் துவங்கி உள்ளன. இதனால், உ.பி. அரசியலில் பாஜக ராமருக்கு அளித்தது போல் பரசுராமருக்கும் அதன் எதிர்கட்சிகள் முக்கிய இடமளிக்கத் துவங்கி உள்ளன.