

மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் திமுக எம்.பி., கனிமொழியிடம் ’நீங்கள் இந்தியரா?’ என கேள்வி கேட்ட விவகாரத்தில், கனிமொழிக்கு கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆதரவு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கர்நாடக முன்னாள் முதல்வரும், மஜத முக்கிய தலைவருமான குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருப்பதாவது:
விமான நிலையத்தில் பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் திமுக எம்பி கனிமொழியிடம் ’நீங்கள் இந்தியரா?’ என கேள்வி எழுப்பி இருக்கிறார். சகோதரி கனிமொழிக்கு நேர்ந்த அவமானத்துக்காக எதிராக நான் குரல் எழுப்புகிறேன். இந்தி அரசியல்வாதிகள் பாகுபாட்டின்மூலம் தென்னிந்திய அரசியல் தலைவர்களின் வாய்ப்புகளை எவ்வாறு பறித்தார்கள் என விவாதிக்க இது சரியான தருணமாகும்.
இந்தி அரசியல் தென்னிந்தியர்களை பிரதமர் ஆக விடாமல் தடுத்துள்ளது. முன்னாள் பிரதமர் தேவகவுடா, முன்னாள் தமிழக முதல்வர்கள் கருணாநிதி, காமராஜ் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள். இந்த தடைகளை மீறி தேவகவுடா வெற்றிகரமாக பிரதமர் ஆனார். இருப்பினும் அவர் மொழியின் காரணமாக விமர்சிக்கப்பட்டு கேலி செய்யப்பட்ட பல சம்பவங்களும் உள்ளன.
தேவகவுடா பிரதமராக இருந்த போது சுதந்திர தின உரையை இந்தியில் நிகழ்த்த வேண்டும் என்பதில் 'இந்தி அரசியல்' வெற்றி கண்டது. ஆனால் பிஹார், உத்தரப் பிரதேச விவசாயிகளுக்காக மட்டுமே இந்தியில் உரையாற்ற தேவகவுடா ஒப்புக்கொண்டார். பிரதமருக்கே இந்த நிலை உருவாகும் அளவுக்கு இந்தி அரசியல் இந்த நாட்டில் செயல்படுகிறது.
நான் இரு முறை மக்களவை உறுப்பினராக இருந்த போது எனக்கும் இதுபோன்ற அனுபவங்கள் ஏற்பட்டது. ஆளும் வர்க்கம் தென்னிந்தியாவை புறக்கணிப்பதை கவனித்திருக்கிறேன். இந்தி அரசியல்வாதிகள் எவ்வாறு சூழ்ச்சி செய்கிறார்கள் என்பதை நான் அருகிலிருந்து பார்த்திருக்கிறேன். பெரும்பாலான இந்தி அரசியல்வாதிகள் இந்தி அல்லாத பிறமாநில அரசியல்வாதிகளை மதிப்பதே இல்லை.
பொதுத்துறை வேலைகளுக்கான தேர்வை ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே எழுத வேண்டியுள்ளது. மத்திய அரசின் பல தேர்வுகளை கன்னடத்தில் எழுத வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இதனால் கன்னடர்களின் வேலை வாய்ப்புகள் தடுக்கப்படுகின்றன. இது முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும்.
மத்திய அரசு மற்ற மொழிகளைப் போல இந்தியும் ஒரு மொழி தான் என கூறுகிறது. ஆனால் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் பல கோடி ரூபாய் செலவழித்து இந்தியை பிரபலப்படுத்தும் திட்டங்களை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இது ரகசிய திட்டங்களில் ஒன்றாகும். ஒவ்வொருவரின் மொழிக்கும் உரிய அன்பு மற்றும் மரியாதையும் அளிக்க வேண்டும். இல்லாவிடில் அதற்காக போராட வேண்டும்.
இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.