

தெலங்கானா மாநிலம் அதிலாபாத்தில் இறப்புக்குப் பிறகும் கூட கரோனா நோயாளிகளுக்கு உரிய கவுரவம் கிடைப்பதில்லை. இறந்த கரோனா நோயாளிகளின் பாதி எரிந்த உடல்களை நாய்கள் தின்னும் புகைப்படங்களும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
கரோனாவினால் இறந்தோர் உடல்களை எரிக்கப் போதிய விறகு, வறட்டிகள் அளிக்கப்படுவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதனால் உடல்கள் பாதி எரிந்தும் எரியாத நிலையில் கிடப்பதால் தெருநாய்கள் அவற்றை உண்ணும் கொடுமையான காட்சிகள் அங்கு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கரோனாவினால் இறந்த ஒருவரின் உடலை எரிக்க 5 முதல் 6 குவிண்டால் விறகு தேவைப்படும். ஆனால் மாநகராட்சி அலுவலர்கள் 3 குவிண்டால்தான் அளிக்கின்றனர். இதோடு மட்டுமல்லாமல் மாநகராட்சி அதிகாரிகள், பாதி எரிந்த நிலையில் உள்ள உடல்களை அப்படியே விட்டுவிட்டுச் செல்கின்றனர்.
இதனையடுத்து தெருநாய்களுக்கு அந்த உடல் பாகங்கள் இரையாகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக அதிலாபாதைச் சேர்ந்த ஒருவர் தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “உடலுக்குத் தீ வைத்தவுடன் உறவினர்களும், ஊழியர்களும் இடுகாட்டை விட்டு வெளியேறி விடுகின்றனர். உடல் முழுவதும் எரிகிறதா என்பதைக் கண்காணிக்க யாரும் அங்கு இருப்பதில்லை” என்றார்.
அதிலாபாத்தில் மவாலா கிராமத்தில் தற்காலிகமாக உருவாக்கப்பட்ட இடுகாட்டில் பிணங்கள் எரிக்கப்படுகின்றன. அங்கு தெருநாய்கள் அதிகம் என்பதால் இவ்வாறு நடக்கிறது.
இது தொடர்பாக நகராட்சி உதவி ஆணையர், தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்குக் கூறும்போது, “அதிகாரிகள் இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர். இதே இடத்தில் 7 உடல்கள் எரிக்கப்பட்டுள்ளன” என்றார்.