Published : 11 Aug 2020 08:39 AM
Last Updated : 11 Aug 2020 08:39 AM

வகுப்புகள், தேர்வுகள், பாடங்கள் இல்லாத  ‘பூஜ்ஜியக் கல்வி ஆண்டாக’ இருக்காது: மத்தியக் கல்வித்துறை

திறந்தவெளி சமூகப் பள்ளிக்கூடம். | பிரதிநிதித்துவ படம்: நிசார் அகமது.

வகுப்புகள், தேர்வுகள், பாடங்களே இல்லாத ஆண்டாக இது நிச்சயமாக இருக்காது, அதாவது ‘பூஜ்ஜியக் கல்வி ஆண்டாக’ இருக்காது என்று உயர்கல்வி செயலர் அமித் கேர் நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் தெரிவித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிறகு வெபினாரில் பேசிய மத்தியக் கல்வி அமைச்சர், ரமேஷ் போக்ரியால் நிஷாங்க், பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிறுவனங்களைத் திறப்பது பற்றி 10-15 நாட்களில் முடிவெடுக்கப்படும் என்றார்.

அதாவது மாநில அரசுகள், கல்வி நிறுவனங்கள், சுகாதார மற்றும் உள்துறை அமைச்சகங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்தி இதற்கு நல்ல தீர்வு எட்டப்படும் என்றார்.

நாடாளுமன்ற நிலைக்குழுக் கூட்டத்துக்கு பாஜக எம்.பி. வினய் சகஸ்ரபுத்தே தலைமை வகிக்க சுமார் 20 எம்.பி.க்கள் கலந்து கொண்டு விவாதித்ததாகத் தெரிகிறது.

அப்போது பல உறுப்பினர்களும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு பற்றி கேள்வி எழுப்பினர், அதற்கு மாநில அரசுகள் அங்குள்ள கரோனா நிலவரங்களை பரிசீலித்து முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. காரணம் 400 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் கரோனா சிகப்பு மண்டலத்தில் உள்ளன.

மார்ச் இறுதியிலிருந்து பள்ளிகள், கல்லூரிகள், பிற கல்வி நிறுவனங்கள் இயங்கவில்லை என்பதால் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இணையதள வசதி இல்லாத பகுதிகளில் சமூக வானொலி மற்றும் மாவட்டச் செய்தித்தாள்கள் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் போய்ச்சேரும் முறையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. ஆந்திராவில் ஒருங்கிணைந்த குரல் பதிவு ஒழுங்குமுறை கடைப்பிடிக்கப்படுவதும் அங்கு எடுத்துரைக்கப்பட்டது.

பள்ளிகள், கல்லூரிகள் திறப்பது பற்றி, பாதுகாப்பும் முக்கியம், கல்வியும் முக்கியம், ஆனால் ஆரோக்கியத்துக்கே முதல் முன்னுரிமை என்று கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

கரோனா தொற்று காரணமாக மூடப்பட்ட பள்ளிகளால் சுமார் 2 கோடியே 40 லட்சம் ஏழை குழந்தைகள் முழுதும் பள்ளிப்படிப்பை நிறுத்தும் அபாயம் இருப்பதாகவும் இவர்கள் கூலிவேலைக்குச் செல்லும் நிலைமை ஏற்படும் என்றும் ஐநா எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x