இஸ்லாமிய மணமகள்.. கிறிஸ்தவ மணமகன்.. தெலங்கானாவில் இந்து முறைப்படி திருமணம்

இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய மணப் பெண்ணும், கிறிஸ்தவ மணமகனும்.
இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய மணப் பெண்ணும், கிறிஸ்தவ மணமகனும்.
Updated on
1 min read

தெலங்கானாவில் இஸ்லாமிய மணமகளுக்கும் கிறிஸ்தவ மணமகனுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடந்தது. மும்மதத்தைச் சேர்ந்தவர்களும் மணமக்களை ஆசீர்வதித்தனர்.

கரோனா பரவல் காரணமாக தற்போது அனைத்து மதத்தவரின் திருமணங்களில் அரசின் நிபந்தனைகளின்படி 50 அல்லது 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். சிலர் நிச்சயித்த திருமணங்களை கூட தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளனர். மேலும் சில திருமணங்கள் பேச்சுவார்த்தையோடு நிற்கிறது.

இந்நிலையில், கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த மணமகனும், இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த மணப்பெண்ணும் காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.

காதலுக்கு எதிர்ப்பு

தெலங்கானாவில் கம்மம் மாவட்டம், அண்ணாரு கூடம் பகுதியைச் சேர்ந்த அனில்குமாரும், கொல்ல கூடம் பகுதியைச் சேர்ந்த ஷேக் சோனியும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்தனர். ஆனால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், இறுதியில் இவர்களின் திருமணத்துக்கு மணமகன் வீட்டார் மட்டும் ஒப்புக்கொண்டனர். அதன் பின்னர், இந்த விஷயத்தில் அந்த கிராமத்தின் இந்துக்கள் ஒன்றுசேர்ந்து இருவீட்டாரிடமும் பேசி அவர்களின் சம்மதத்தைப் பெற்றனர்.

அதனால், மணமக்கள் தாங்கள் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்களாக இருந்தாலும், இந்து மதத்தினர் மூலமாகத்தான் திருமணத்திற்கு ஒப்புதல் கிடைத்தது என்பதால், தங்கள் திருமணம் இந்து முறைப்படிதான் நடக்க வேண்டுமென முடிவு செய்தனர்.

இதற்கு 3 மதத்தினரும் ஒப்புக்கொண்டதால், கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று காலை இந்து முறைப்படி, ஹோம பூஜைகள் செய்து, மாலை மாற்றி, மோதிரம் மாற்றி, திருமணம் நடந்தது. மத ஒற்றுமையை காட்டிய இந்த திருமணத்திற்கு அந்த ஊரில் உள்ள இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதத்தினர் எவ்வித பேதமும் இன்றி கலந்து கொண்டு புதுமண தம்பதியினரை வாழ்த்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in