

காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் நடந்த பேச்சு வார்த்தைகளுக்கு அடுத்தபடியாக ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் தான் என்றைக்கும் பதவிக்கு ஆசைப்பட்டதல்ல, கொள்கைகள் சார்ந்தே தன் போராட்டம் என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பிறகு அவர் முதல் முறையாக பொதுவெளிக்கு வந்து பேசிஉள்ளார். அதாவது தானும் மற்ற எம்.எல்.ஏ.க்களும் அமைப்பு சார்ந்த பிரச்சினைகளை எழுப்பியதாக அவர் கூறினார்.
பிரியாங்கா காந்தி வதேரா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களைச் சந்தித்த பிறகு சச்சின் பைலட் கூறியதாவது:
நாங்கள் கொள்கைகள் பற்றிய விவகாரங்களையே எழுப்பினோம். எங்கள் குறைகளை தீர்க்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர், இதை வரவேற்கிறோம்.
நான் எந்த ஒரு பதவிக்காகவும் ஆசைப்பட்டவனில்லை. கட்சி எனக்கு பதவி அளித்துள்ளது, அதை அவர்கள் எப்போது வேண்டுமானாலும் திருப்பி எடுத்துக் கொள்ளலாம். மரியாதை காக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி உருவாக பாடுபட்டவர்களுக்கு மதிப்பளிக்க வெண்டும், அதற்குரிய வெகுமதிகளை அளிக்க வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சியை கொண்டு வர பாடுபட்டேன் எனவே மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை கட்சி நிறைவேற்ற வேண்டும் என்று நம்புகிறேன்.
சோனியாஜி, ராகுல்ஜி, பிரியங்காஜி ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் குறைகளை அவர்கள் குறித்துக் கொண்டனர், அதை புரிந்து கொண்டனர். நான் என் நம்பிக்கையில் உறுதியாக இருக்கிறேன், நாட்டுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்.
ராஜஸ்தான் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் நிறைவேறவும், ஜனநாயக மதிப்புகள் காக்கப்படவும் நான் தொடர்ந்து பணியாற்றுவேன், என்றார் சச்சின் பைலட்.
கூட்டத்துக்குப் பிறகு, கே.சி.வேணுகோபால் கூறும்போது, “பரஸ்பர மரியாதை மற்றும் எழுப்பப்பட்ட கவலைகளை தீர்த்து காங்கிரஸ் முன்னேற்றப்பாதையில் செல்லும்” என்றார்.