

கேரளாவில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், கடந்த 7-ம் தேதி அதிகாலை இடுக்கி மாவட்டத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் இதுவரை 49 பேர் இறந்துள்ளனர். நிலச்சரிவில் சிக்கி இறந்தவர்களின் சடலங்களைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
இதனிடையே அப்பகுதி தொழிலாளர்கள் வளர்த்து வந்த நாய்கள், தங்களது எஜமானர்களைத் தேடி அலையும் காட்சி காண்போரின் மனதை நெகிழச் செய்துள்ளது. அந்தப் பகுதியை 2 நாய்கள் தொடர்ந்து சுற்றி சுற்றி வந்து எஜமானர்களைத் தேடி வருகின்றன. அவற்றுக்கு உணவு கொடுக்க மீட்புப் படையினர் முயன்ற போது அதை சாப்பிட அந்த நாய்கள் மறுத்துவிட்டன.
அப்பகுதியைச் சேர்ந்த தொழிலாளி முனியாண்டி கூறும்போது, “வளர்த்தவர்களைத் தேடி அந்த நாய்கள் சுற்றி சுற்றி வருகின்றன. இரண்டு நாட்களாக நாய்கள் எதையும் சாப்பிடவில்லை. நாங்கள் சாப்பிடுமாறு வற்புறுத்திய போது சிறிதளவு மட்டுமே சாப்பிட்டன” என்றார்.
மூணாறு பகுதியைச் சேர்ந்த எம்.ஜே.பாபு என்பவர் கூறும்போது, “மீட்புப் படையினர் நிலச்சரிவில் இருந்து உடல்களை எடுக்கும் பணியின் போது அந்த நாய்கள் இப்பகுதியையே சுற்றி சுற்றி வருகின்றன. மண்ணில் புதையுண்ட உடல்களை வெளியே எடுக்கும் போது அந்தப் பகுதிக்கு ஓடிச் சென்று தங்களை வளர்த்த எஜமானர்களின் முகம் தெரிகிறதா என்று நாய்கள் தேடுகின்றன. அங்கு தங்களது எஜமானர்கள் இல்லையென்று தெரிந்ததும் மீண்டும் பாறைப் பகுதிக்கு வந்துவிடுகின்றன. இதைப் பார்த்த பலரும் கண்ணீர் வடிக்கின்றனர். நாய்கள்தான் மனிதர்களின் சிறந்த தோழன் என்பதில் சந்தேகமே இல்லை. சம்பவம் நடந்த அன்றைய இரவில் நாய்கள் அங்கும் இங்கும் ஓடி அலைந்துள்ளன. ஏதோ ஆபத்து வரவிருப்பதை அவை முன்கூட்டியே உணர்ந்துள்ளன” என்றார்.