

கோழிக்கோடு விமான விபத்தில் பலியானவர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் மீட்பு பணியில் ஈடுபட்டவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் எனவும் முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் திங்கட்கிழமை நிருபர்களிடம் கூறியது:
கேரளாவில் இன்று 1,184 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் மலப்புரம் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 255 பேருக்கு நோய் பரவி உள்ளது. இன்று நோய் பாதிக்கப்பட்டவர்களில் 106 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 73 பேர் வெளி மாநிலங்களில் இருந்தும் வந்துள்ளவர்கள் ஆவர். 956 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவி உள்ளது. இதில் 114 பேருக்கு நோய் எப்படி, எங்கிருந்து பரவியது என்று தெரியவில்லை. கரோனா பாதித்து 7 பேர் மரணமடைந்துள்ளனர்.
ஆகஸ்ட் 5ம் தேதி மரணமடைந்த 54 வயதான எர்ணாகுளம் நாயரம்பலம் பகுதியை சேர்ந்த ஷைனி, 7ம் தேதி மரணமடைந்த கொல்லம் மைலக்காடு பகுதியை சேர்ந்த 45 வயதான தேவதாஸ், காசர்கோடு மாவட்டம் நீலேஸ்வரம் பகுதியை சேர்ந்த 68 வயதான முகமது, வயநாடு மாவட்டம் கல்பெட்டா பகுதியை சேர்ந்த 65 வயதான அலவிக்குட்டி, 8ம் தேதி மரணமடைந்த மலப்புரம் மாவட்டம் பள்ளிக்கல் பகுதியை சேர்ந்த 52 வயதான நபீசா, கோழிக்கோடு மாவட்டம் கோயிலாண்டி பகுதியை சேர்ந்த 64 வயதான அபூபக்கர், திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடையை சேர்ந்த 50 வயதான ஜமா ஆகியோர் கரோனா பாதித்து இறந்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து இதுவரை கேரளாவில் கரோனா பாதிப்பால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது.
மலப்புரம் மாவட்டத்திற்கு அடுத்தபடியாக நோய் பாதிக்கப்பட்டவர்களில் 200 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 147 பேர் பாலக்காடு மாவட்டத்தையும், 146 பேர் காசர்கோடு மாவட்டத்தையும், 101 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 66 பேர் கோழிக்கோடு மாவட்டத்தையும், 63 பேர் கண்ணூர் மாவட்டத்தையும், 41 பேர் கொல்லம் மாவட்டத்தையும், தலா 40 பேர் கோட்டயம் மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களையும், 33 பேர் வயநாடு மாவட்டத்தையும், 30 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 18 பேர் இடுக்கி மாவட்டத்தையும், 4 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர்.
இன்று சுகாதார துறையை சேர்ந்த 41 பேருக்கு நோய் பரவியுள்ளது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக 13 சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு நோய் பரவி உள்ளது. நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 784 பேர் இன்று குணமடைந்துள்ளனர். இதையடுத்து இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,620 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 12, 737 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கேரளாவில் பல்வேறு பகுதிகளில் 1,49,295 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 1,37, 419 பேர் வீடுகளிலும், 11,876 பேர் மருத்துவமனைகளிலும் உள்ளனர். இன்று கரோனா அறிகுறிகளுடன் 1,323 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 20, 583 பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. சிபிநாட், ட்ரூநாட் உள்பட இதுவரை மொத்தம் 10,00,988 பல்வேறு வகையான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 2,829 பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன.
மேலும் சுகாதாரத்துறை ஊழியர்கள், வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் சமூக நெருக்கமுள்ள 1,37,805 பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 127 பேரின் பரிசோதனை முடிவுகள் இன்னும் வர உள்ளன. கேரளாவின் நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் பட்டியலில் இன்று 13 இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது கேரளாவில் நோய் தீவிரம் உள்ள பகுதிகளின் எண்ணிக்கை 531 ஆக உயர்ந்துள்ளது.
கோழிக்கோடு விமான விபத்தில் மரணம் அடைந்த ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மீட்பு பணியில் ஈடுபட்ட அனைவரும் தனிமையில் செல்ல வேண்டும்.
மூணாறு நிலச்சரிவில் சிக்கிய 5 பேரின் உடல்கள் இன்று மதியம் வரை மீட்கப்பட்டுள்ளன. இனியும் 23 பேரின் உடல்கள் மண்ணுக்குள் இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெறும். நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்காக தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீஸ் ஆகியோர் கடும் முயற்சி எடுத்து வருகின்றனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட 16 கிலோ மீட்டர் சுற்றளவில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் இன்று 14 வயதான வினோதினி, 12 வயதான ராஜலட்சுமி, 32 வயதான பிரதீஷ் மற்றும் 58 வயதான வேலுத்தாய் ஆகியோர் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். ஒருவரின் பெயர் விவரம் தெரியவில்லை.
திருவனந்தபுரத்தில் அதிகளவு நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேற்று 2,800 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 288 பேருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. கடற்கரை பகுதிகளில் நோய் தீவிரம் அதிகமாகி வருவதால் மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்தும், பல்வேறு துறைகளை ஒருங்கிணைப்பதற்காகவும் ஐஜி ஸ்ரீஜித் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கடலோர பாதுகாப்பு படை போலீஸ் அவருக்கு உதவும். கரோனா நோய் வேகமாக பரவி வருவதால் மக்கள் நிபந்தனைகளை கடைப்பிடிக்கிறார்களா என்பதை கண்காணிப்பதற்காக சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எர்ணாகுளம், கோழிக்கோடு, காசர்கோடு உள்பட மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் சிறப்பு அதிகாரியாக ஹர்ஷிதா அட்டல்லூரி நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று மலப்புரம் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்று இந்த மாவட்டத்தில் 147 பேருக்கு கொரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததன் மூலம் நோய் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இன்று நோய் பாதிக்கப்பட்ட 255 பேரில் 219 பேருக்கு கரோனா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்ததின் மூலம் நோய் பரவியுள்ளது. எனவே இந்த மாவட்டத்தில் நோய் தடுப்பு நாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்படும். கோழிக்கோடு மாவட்டத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் இடையே நோய் பரவுவது அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் 36 தொழிலாளர்களுக்கு நோய் பரவி உள்ளது.
ஊரடங்கு சட்டத்தின் போது காசர்கோடு எல்லையிலுள்ள மாக்கூட்டம் பாதையில் கர்நாடகா மண் போட்டு மூடி இருந்தது. இந்த பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த பாதை வழியாக செல்லலாம். கரோனா இணையதளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த வழியாக செல்ல முடியும்.
இன்று பிரதமருடன் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தப்பட்டது. கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காக மத்திய அரசு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 10 குழுக்களை அனுப்பி இருந்தது. மூணாறில் மீட்புப் பணிகளுக்காகவும் தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பப்பட்டது. மேலும் கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கியவர்களுக்கு மத்திய படைகள் உடனடியாக உதவின. இந்த சிறப்பான நடவடிக்கைகளுக்காக பிரதமரிடம் கேரளா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. கேரளாவுக்கு தேவையான வளர்ச்சி பணிகள் குறித்து பிரதமரிடம் ஆலோசிக்கப்பட்டது.
கேரளாவில் கடந்த மூன்று வருடங்களாக அதிக அளவில் மழை பெய்து வருகிறது. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் 427 மில்லி மீட்டர் மழை பெய்யும். ஆனால் இந்த வருடம் கடந்த ஆகஸ்ட் 1 முதல் 10 ஆம் தேதி வரை 10 நாளில் மட்டும் 476 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. அதாவது ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 10 நாளில் பெய்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக ஆகஸ்ட் மாதத்தில் மிக அதிகமாக மழைபெய்து வருகிறது. வெள்ள பாதிப்புகளை தடுக்க கேரள அரசு சிறப்பான முன்னேற்பாடுகளை செய்து உள்ளது. முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியை தாண்டியுள்ளது. எனவே அந்த அணையில் இருந்து வைகை அணைக்கு தண்ணீர் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கேரளத் தலைமைச் செயலாளர் தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.
கரோனா தடுப்பு பணிகளுக்காக கேரள அரசு ஏராளமான நிதியை ஒதுக்கி உள்ளது. இந்த சமயத்தில் வெள்ள பாதிப்பும் வந்துள்ளதால் கேரளாவில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே கேரளாவுக்கு மத்திய அரசுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.