Last Updated : 10 Aug, 2020 02:47 PM

 

Published : 10 Aug 2020 02:47 PM
Last Updated : 10 Aug 2020 02:47 PM

கரோனா சூழலிலும் வெற்றிகரமாக தேர்தல் நடத்தி பிஹார், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வழிகாட்டும் இலங்கை

இலங்கையில் தேர்தல் நாளன்று சமூக இடைவெளியைக் கடைபிடித்து வாக்களிக்கக் காத்திருந்த வாக்காளர்கள்.

கொழும்பு

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் சூழலிலும் தெற்காசியாவிலேயே முதல் நாடாக வெற்றிகரமாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தி இலங்கை சாதனை படைத்துள்ளது.

இந்தத் தேர்தலில் பின்பற்றப்பட்ட பாதுகாப்பு வழிமுறைகளைக் கொண்டு பிஹார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

உலகம் முழுவதும் நாளுக்கு நாள் வேகமாகப்‌ பரவி வரும் கரோனா வைரஸ் மனிதர்களை மட்டுமல்லாமல் அரசு இயந்திரத்தையும் கடுமையாக பாதித்துள்ளது.

தடுப்பு ஊசி, குணப்படுத்தும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில்,முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அரசு இயந்திரம் முடிந்தவரை இயங்கி வருகின்றது. கரோனா அச்சுறுத்தல் சூழலில் கிழக்காசியாவில் தென்கொரியாவைத் தொடர்ந்து தெற்காசியாவில் முதல் நாடாக இலங்கை வெற்றிகரமாக நாடாளுமன்றத் தேர்தலை நடத்தியுள்ளது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மார்ச் 2-ம் தேதி ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ச இலங்கையின் 8-வது நாடாளுமன்றத்தை முன்கூட்டியே தேதி கலைத்தார். ஏப்ரல் 25-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முதல் கரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்.

தேர்தல் பணிகள் வேகமாகத் தொடங்கி வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில், மார்ச் 20-ம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தேர்தல் ஆணையம் ஜூன் 20-ம் தேதிக்கு தேர்தலை ஒத்திவைத்தது.

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை பணிகளும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன.

ஜூலை இறுதிவரை 2,033 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 11 பேர் மட்டுமே உயிரிழந்தனர். கரோனா வைரஸ் சமூகப் பரவலாக மாறியுள்ளதா என நாடு முழுவதும் ரேண்டம் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் சமூகப் பரவலாக மாறவில்லை என்பதை உறுதி செய்ததைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 5ம் தேதி தேர்தல் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து தேர்தல் ஆணையம், ' க‌ரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதால் இந்த நாடாளுமன்றத் தேர்தல் சுகாதார அமைச்சகத்தின் முழுமையாக வழிகாட்டல் மற்றும் கண்காணிப்பின் கீழ் நடத்தப்படும், தேர்தல் விதிமுறைகளைப் போலவே சுகாதாரத்துறை விதிமுறைகளையும் அனைத்து கட்சிகளும், வேட்பாளர்களும், பொதுமக்களும் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும்' என அறிவித்தது.

குறிப்பாக பிரச்சாரத்தின் போது வேட்பாளர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிவது, தனிநபர் இடைவெளியைப் பின்பற்றுவது, பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் இடங்களில் கிருமி நாசினி தெளிப்பது உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பிரச்சாரக் கூட்டங்களில் எக்காரணம் கொண்டும் 300 பேருக்கு மேல் பங்கேற்கக்கூடாது. தேசிய அளவிலான தலைவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் தனிநபர் இடைவெளியுடன் அதிகப்பட்சம் 500 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என கண்டிப்பான விதிமுறைகளை அமல்ப்படுத்தியது.

இதன் மூலம் பிரமாண்ட தேர்தல் பொதுக்கூட்டங்கள், பேரணிகள்,மாநாடுகள் ஆகியவற்றால் மக்கள் கூடுவது தவிர்க்கப்பட்டது. எனவே தேர்தலில் போட்டியிட்ட 7,452 வேட்பாளர்களும் ஃபேஸ்புக், வாட்ஸ் அப்,ட்விட்டர், யூ டியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் வாயிலாக டிஜிட்டல் பிரச்சாரத்தை முன்னெடுத்தனர். இதனால் அரசியல் கட்சிகளின் தேர்தல் செலவினங்கள் வெகுவாக‌க் குறைந்ததாகத் தேர்தல் ஆணையக் குழு தெரிவித்துள்ளது.

பாதுகாப்புடன் வாக்குப்பதிவு:

வாக்குப்பதிவு தினத்தன்று இலங்கையில் உள்ள ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 வாக்காளர்களும் பாதுகாப்பாக‌ வாக்களிப்பதற்கு தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையமும், சுகாதாரத் துறையும் இணைந்து மேற்கொண்டன.

22 தேர்தல் மாவட்டங்களிலும் முன்பை விட அதிக எண்ணிக்கையில் பாதுகாப்பான வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டன. அதன் அருகிலே கரோனா தொற்று தென்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமும் அமைக்கப்பட்டது.

இதனால் ஒவ்வொரு வாக்குசாவடியிலும் தேர்தல் பணியாளர்கள் மட்டுமல்லாமல் சுகாதாரத்துறை பணியாளர்களும் நியமிக்கப்பட்டனர். வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், 3 அடி இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வேண்டும், வாக்குச்சாவடியின் உள்ளே நுழையும் போதும், வெளியேறும் போதும் கிருமி நாசினியால் கை சுத்தம் செய்ய வேண்டும், கையெழுத்திடுவதற்கு தேவையான பேனாவை வாக்காளர்களே கொண்டுவர வேண்டும் என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டது. இது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கிராம அளவில் நடத்தப்பட்டு, வாக்களிக்கும் முறை தொடர்பான செய்முறை வீடியோவும் வெளியிடப்பட்டது.

ஆகஸ்ட் 5ம் தேதி வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக வாக்குசாவடிகள் முழுமையாக கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட்டு, ஊழியர்கள் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்டது.

அவர்களுக்கு உடல்நிலை கோளாறு என உறுதி செய்த பின்னரே பணியில் அமர்த்தப்பட்டனர். அதேபோல் வாக்களிக்க வரும் வாக்காளர்களும் உடல் வெப்பநிலை சோதிக்கப்பட்ட பின்னரே வாக்கு சாவடிக்குள் அனுமதிக்கப்பட்டனர்.இடையில் யாருக்கேனும் கரோனா அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள தனிமைப்படுத்தும் முகாம் மற்றும் சிகிச்சை மையத்துக்கு கொண்டுசெல்லப்பட்ட‌னர்.

கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக காலை 9 மணி முதல் மக்கள் ஆர்வமுடன் தனிநபர் இடைவெளியுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். கரோனா அச்சுறுத்தலைக் கடந்து சுமார் 70 சதவீத வாக்குகள் பதிவானது. இலங்கையில் வாக்குகள் பதிவான அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்படுவது வழக்கம். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக வாக்குகள் அடுத்த நாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

பாடம் கற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம்:

கரோனா அச்சுறுத்தலைக் கடந்து பெரிய அளவிலான நாடாளுமன்ற தேர்தலை இலங்கை தேர்தல் ஆணையம் வெற்றிகரமாக நடத்தியிருப்பதைமற்ற நாடுகளின் தேர்தல் ஆணையங்கள் உன்னிப்பாக கவனித்துள்ளன.

இந்த தேர்தலில் பின்பற்றப்பட்ட வழிமுறைககளை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் இலங்கை முழுவதும் பயணித்து கண்காணித்தனர். இலங்கை தேர்தலை வழிகாட்டியாகக் கொண்டு, பிஹாரில் அக்டோபரில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுவதால் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர்.

கரோனா பாதிப்புகள் குறைய இன்னும் ஓரிரு ஆண்டுகள் ஆகலாம் என உலக சுகாதார மையம் கணித்துள்ளது. அதற்கு முன்னதாக தமிழக சட்டப்பேரவைக்கு 2021ம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

எனவே இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் பின்பற்றப்பட்ட விதிமுறைகளை மாதிரியாகக் கொண்டு, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையும் நடத்த இந்திய தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ள‌தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x