

2009-ம் ஆண்டு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் டெஹெல்கா ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் தலைமை நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்று தெரிவித்த கருத்து நீதிமன்ற அவமதிப்புக்குரியதா என்பதை அவதானிக்க வேண்டிய தேவையிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 17ம் தேதிக்குத் தள்ளி வைத்து உத்தரவிட்டது உச்ச நீதிமன்ற நீதிபதி அருண் மிஸ்ரா தலைமை அமர்வு.
இன்று வீடியோ கான்பரன்சிங்கில் நடந்த விசாரணையில் மூத்த வழக்கறிஞர்கள் சாந்தி பூஷண், பிரசாந்த் பூஷண், இவர்களது வழக்கறிஞர் ராஜீவ் தவண் ஆகியோர் நீதிபதிகள் முன்னிலையில் திரையில் தோன்றினர்.
அதாவது பிரசாந்த் பூஷணின் ‘நீதிபதிகள் ஊழல்’ குறித்த கருத்து ‘தன்னிலே கோர்ட் அவமதிப்புக்குரியதா’ என்பதை பரிசீலிக்க வேண்டும் என்று நீதிமன்றம் முடிவெடுத்து விசாரணையை ஆகஸ்ட் 17ம் தேதிக்குத் தள்ளி வைத்தது.
ஆகஸ்ட் 4ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக கிட்டத்தட்ட நாள் முழுதும் நடந்த வழக்காடுதலில் உச்ச நீதிமன்ற அமர்வு, ’இது தொடர்பாக பிரசாந்த் பூஷண் கோரிய மன்னிப்பை, விளக்கத்தை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லையெனில், விசாரிப்போம் என்று தெரிவித்தது. ஆகஸ்ட் 4ம் தேதி இந்த விசாரணை வாட்ஸ் அப் அழைப்பு மூலம் நடந்ததாக பிரசாந்த் பூஷண் அலுவலக செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது.
பூஷண் ஊழல் என்ற தன் கருத்து நிதி ரீதியாக ஊழல் என்று பொருளாகாது, மாறாக பரந்துபட்ட பொருளில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நடைமுறைகளுக்கு ஒவ்வாத பழக்கவழக்கங்கள் என்ற பொருளில் கூறியதாக தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
மேலும் தன் கருத்து நீதிபதிகளைக் காயப்படுத்தவோ, நீதித்துறையின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்காகவோ கூறப்படவில்லை என்று பூஷண் தெரிவித்தார்.
இந்நிலையில் பிரசாந்த் பூஷண் 2009 பேட்டியில் நீதித்துறை ஊழல் பற்றி கூறிய கருத்தை அதன் சாதகபாதக அம்சங்களுடன் விசாரிக்க முடிவெடுத்து உச்ச நீதிமன்ற அமர்வு ஆக.17ம் தேதிக்கு விசாரணையை தள்ளி வைத்தது.
பிரசாந்த் பூஷண் தன் 2009ம் ஆண்டு டெஹல்கா நேர்காணலில் 16 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் பாதிபேர் ஊழல்வாதிகள் என்று குற்றம்சாட்டியிருந்தார். இதுதான் தற்போது அவமதிப்பு வழக்காக உருவெடுத்துள்ளது.
இவரது கருத்தை வெளியிட்டமைக்காக டெஹல்காவின் மூத்த பத்திரிகையாளர் தருண் தேஜ்பால் மன்னிப்புக் கேட்டதும் குறிப்பிடத்தக்கது.