

பசுவின் சாணத்தை விலை கொடுத்து விவசாயிகளிடம் இருந்து பெறும் திட்டத்தை சத்தீஸ்கர் அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து ஒரு கிராமத்தில், 100 கிலோ பசுவின் சாணத்தை அடையாளம் தெரியாதவர்கள் திருடிச் சென்றுள்ளனர்.
சத்தீஸ்கரின் வடக்குப் பகுதி மாவட்டமான கோரியாவில் ரோஜ்கி கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் லாலா ராம், சேம் லால் ஆகியோர் தாங்கள் வளர்க்கும் பசுவிலிருந்து கிடைக்கும் சாணத்தைக் கூட்டுறவுக்கு விற்பனை செய்ய சேமித்து வைத்திருந்தார்கள். ஆனால், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் 100 கிலோ சாணத்தை இருவரின் வீட்டிலிருந்தும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
பசுவின் சாணத்தைக்கூட திருடர்கள் விட்டுவைக்கவில்லை என்று வருந்திய இரு விவசாயிகளும் கிராமத்தில் உள்ள கூட்டுறவு சங்க உறுப்பினர்களிடம் புகார் அளித்தனர். அவர்கள் நடவடிக்கை எடுத்து போலீஸிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால், இன்னும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை.
சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த 5-ம் தேதி முதல்வர் பூபேஷ் பாகல், "கோதான் நியாய யோஜனா" திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தின் படி பசுக்களை வளர்ப்போர், பண்ணை உரிமையாளர்களிடம் இருந்து சாணத்தை கிலோ 2 ரூபாய்க்கு அரசு பெற்றுக்கொள்ளும்.
பசுவின் சாணத்தின் மூலம் மதிப்புக்கூட்டுப் பொருட்களை கூட்டுறவு சொசைட்டி மூலம் உற்பத்தி செய்து அரசு விற்பனை செய்கிறது. காங்கிரஸ் அரசின் இத்திட்டத்துக்கு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. முதல் கட்டமாக விவசாயிகள், பண்ணை உரிமையாளர்களுக்கு ரூ.1.65 கோடி பணம் கடந்த 5-ம் தேதி வங்கி மூலம் நேரடியாக பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த ரூ.1.65 கோடி பணம், பசுக்களை வளர்க்கும் 46 ஆயிரம் பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோர்யா மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி சங்கீத் லக்ரா கூறுகையில், “பசு வளர்ப்பவர்கள் சாணத்தை சேமித்து வைத்து, அதனைப் பசுதான குழுவிடம் அளித்து பணம் பெற்றுச் செல்கிறார்கள். சாணத்துக்குப் பணம் அளிக்கும் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து பசுவின் சாணம் கிராமங்களில் திருட்டுப் போவது அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தை போலீஸாருக்குக் கொண்டு செல்லும் முன், கிராம மக்களே தீர்வு காண வேண்டும்” எனத் தெரிவி்த்தார்.