Published : 10 Aug 2020 08:13 AM
Last Updated : 10 Aug 2020 08:13 AM

ஜனநாயகத்தைக் காப்பாற்ற மக்கள் குரலுக்கு மதிப்பளியுங்கள்: ராஜஸ்தான் எம்எல்ஏ-க்களுக்கு முதல்வர் அசோக் கெலாட் கடிதம்

ஜனநாயகத்தைக் காப்பாற்ற மக்களின் குரலுக்கு மதிப்பளியுங்கள் என்று ராஜஸ்தான் மாநில எம்எல்ஏ-க்களுக்கு முதல்வர் அசோக் கெலாட் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக அக்கட்சியின் முக்கிய தலைவர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்கியுள்ளார். அவருக்கு ஆதரவாக 18 எம்எல்ஏ-க்கள் உள்ளனர். ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்று முதல்வர் அசோக் கெலாட் ஏற்கெனவே குற்றம்சாட்டினார். காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஜெய்சால்மரில் உள்ள சொகுசு விடுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும் 14-ம் தேதி சட்டப்பேரவை கூட உள்ளது.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் முதல்வர் கெலாட் நம்பிக்கை வாக்கு கோருவார் என்று தெரிகிறது. இந்நிலையில், எம்எல்ஏ-க்கள் அனைவருக்கும் அசோக் கெலாட் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் கூறியிருப்பதாவது:

நீங்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏ-வாகவும் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மாநிலத்தின் நலனுக்காக தொடர்ந்து உழைக்க வேண்டும் என்ற வாக்காளர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப முடிவு செய்யுங்கள். தவறான கலாச்சாரத்தை தவிர்க்க வேண்டும். கடந்த தேர்தலில் மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துதான் ஆட்சியமைக்க வாய்ப்பளித்தனர். மக்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை பராமரிக்கவும் ஜனநாயகத்தைக் காக்கவும் மக்களின் குரலை கவனித்து அதற்கு மதிப்பளியுங்கள் என்று எம்எல்ஏ-க்களை கேட்டுக் கொள்கிறேன். மக்களின் உணர்வுகளுக்கு எதிராக அரசைக் கவிழ்க்க நடைபெறும் முயற்சிகள் வெற்றிபெறாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

குஜராத்தில் பாஜக எம்எல்ஏக்கள்

இந்நிலையில், பாஜக எம்எல்ஏ-க்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாயின. பாஜகவைச் சேர்ந்த 12 எம்எல்ஏ-க்கள் கடந்த வெள்ளிக்கிழமை தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம் அகமதாபாத் சென்றனர். கடந்த சனிக்கிழமை மேலும் 6 பாஜக எம்எல்ஏ-க்கள் தனி விமானம் மூலம் குஜராத் சென்றனர். போர்பந்தரில் உள்ள சொகுசு விடுதியில் அவர்கள் தங்கியிருப்பார்கள் என்றும் சோமநாதர் கோயிலுக்கு செல்வார்கள் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா கூறுகையில், ‘‘காங்கிரஸைப் போல எங்கள் கட்சியும் எம்எல்ஏ-க்களை பாதுகாப்பாக அடைத்து வைப்பதாக கூறப்படுவது சரியல்ல. பாஜகவில் அதுபோன்ற கலாச்சாரம் இல்லை. பாஜக எம்எல்ஏ-க்கள் ஒற்றுமையாக உள்ளனர். பாஜக எம்எல்ஏ-க்களிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக மாநில காங்கிரஸ் அரசு வதந்திகளை பரப்பி வருகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x