தூங்குவது போல் நடித்து கொலைகாரர்களிடம் இருந்து தப்பிய 3 வயது சிறுமி: தாய், அக்கா, அண்ணன் கொலைகளை நேரில் பார்த்த சாட்சி

தூங்குவது போல் நடித்து கொலைகாரர்களிடம் இருந்து தப்பிய 3 வயது சிறுமி: தாய், அக்கா, அண்ணன் கொலைகளை நேரில் பார்த்த சாட்சி
Updated on
1 min read

டெல்லியில் தன் தாய் மற்றும் தனது அக்கா, அண்ணன் ஆகியோரை கொலை செய்தவர்களிடமிருந்து, தூங்குவதுபோல் நடித்து 3 வயது சிறுமி உயிர்தப்பியுள்ளாள்.

மூன்றுபேர் வீட்டுக்குள் நுழைந்து கொலை செய்ததைப் பார்த்த அச்சிறுமி, அவர்களை அடையாளம் காட்ட முடியும் எனத் தெரிவித்துள்ளாள்.

டெல்லி ரகுபிர் நகரில் உள்ள 5 மாடி குடியிருப்பில் 2-வது தளத்தில் வாடகைக்கு வசித்துவந்த சப்னம்(28) என்ற பெண்ணும், அவரது 8 வயது மகள், 6 வயது மகன் ஆகியோர் மர்ம நபர்களால் நேற்று கொல்லப்பட்டனர். சப்னம் உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2 ஆண்டுகளாக இங்கு வசித்து வந்துள்ளார்.

விரைவில் விஷ்ணு கார்டன் பகுதிக்கு அவர்கள் குடிபெயர இருந்ததாக சப்னமின் தந்தை ரியாஸ் ஹுசைன் தெரிவித்துள்ளார். அண்டை வீட்டாரின் அத்துமீறல் காரணமாக அவர்கள் வேறு இடத்துக்கு மாற முடிவு செய்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் சப்னம் மற்றும் அவரது இரு குழந்தைகள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 வயது சிறுமி உயிர்தப்பியுள்ளாள். இதுதொடர்பாக அச்சிறுமி தி இந்துவிடம் (ஆங்கிலம்) கூறும்போது, ‘வீட்டுக்குள் மூன்று பேர் வந்தனர். அவர்களை ஏற்கெனவே பார்த்திருக்கிறேன். இங்கு அருகில்தான் வசிக்கின்றனர். அவர்கள் வந்ததும் கண்ணை மூடிக் கொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

கொலைகாரர்களை ‘மாமா’ என அச்சிறுமி குறிப்பிடுகிறார். அவர்கள் முன்பே தங்கள் வீட்டுக்கு வந்திருப்பதாகவும், பார்த்தால் அடையாளம் காட்ட முடியும் எனவும் அச்சிறுமி கூறுகிறாள்.

பிரதான குற்றவாளியாக அண்டை வீட்டில் வசித்த ஒருவரை போலீஸார் சந்தேகிக்கின்றனர். அவர் இதற்கு முன்பு சப்னத்திடம் அத்துமீறி நடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

மேற்கு காவல் துறை துணை ஆணையர் புஷ்பேந்திர குமார் கூறும்போது, “அவர்கள் அந்த பெண்ணை மட்டும் குறிவைத்து வந்திருக்க வேண்டும். விவரம் தெரிந்த இரு குழந்தைகள் அடையாளம் காட்டி விடக் கூடும் என்பதால் அவர்களையும் கொன்றுள்ளனர். மூன்றாவது குழந்தை சிறுமி என்பதால் தங்களை அடையாளம் காட்ட வாய்ப்பில்லை என நம்பியிருக்க வேண்டும்” என்றார்.

வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததற் கான தடயம் இல்லாததால், குற்றவாளிகளுள் ஒருவர் அதே கட்டட வளாகத்துக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும் என காவல் துறையினர் கருதுகின்றனர்.

இக்கொலை தொடர்பாக கியலா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் குற்றம்சாட்டிய அப்பகுதி மக்களில் சிலர் காவலர்கள் மற்றும் காவல் துறை வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 10 காவலர்கள் காயமடைந்தனர். இரண்டு இரு சக்கர வாகனங்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in