

நாட்டில் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை சுமார் 200 மருத்துவர்கள் உயிரிழந்துள்ளதாக இந்திய மருத்துவர் சங்கம் (ஐஎம்ஏ) கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும் என அச்சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு ஐஎம்ஏ சார்பில் நேற்று முன்தினம் எழுதப்பட்ட கடிதத்தில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸ் தொற்றுக்கு மருத்துவர்கள் ஆளாவதும் உயிரிழப்பதும் ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் பொது மருத்துவர்களாக உள்ளனர். காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகளுக்கு மக்கள் முதலில் பொது மருத்துவர்களை நாடுவதால் அவர்கள் தொற்றுக்கு ஆளாகின்றனர். ஐஎம்ஏ திரட்டிய புள்ளிவிவரப்படி இதுவரை 196 மருத்துவர்களை நம் நாடு இழந்துள்ளது. இதில் 170 பேர், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர்.
எனவே, மருத்துவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலனில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்த வேண்டும். மாநில அரசுகளின் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு வசதிகளை அனைத்து துறை மருத்துவர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஐஎம்ஏ தேசியத் தலைவர் ரஞ்சன் சர்மா கூறும்போது, “நாடு முழுவதும் குறைந்த கட்டணத்தில் சேவை அளிக்கும் 3.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் எங்கள் சங்கத்தில் உள்ளனர். அரசு மருத்துவர், தனியார் மருத்துவர் என்ற பாகுபாடின்றி அனைவரையும் கரோனா பாதிக்கிறது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.