கிழக்கு லடாக்கில் இருந்து மேலும் பின்வாங்க வேண்டும்- சீனாவுக்கு இந்தியா மீண்டும் எச்சரிக்கை
கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் சீன வீரர்கள் தாக்கியதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
மத்திய அரசின் ராஜ்ஜிய, ராணுவ ரீதியிலான நடவடிக்கைகளால் சீன ராணுவ வீரர்கள் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு பின்வாங்கினர். எனினும் கிழக்கு லடாக்கின் டிபிஓ பகுதியில் சீன வீரர்கள் பெருமளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.
சீனாவின் பட்டுப் பாதை திட்டத்தின்படி, அந்த நாட்டின் ஜின்ஜியாங்மாகாணத்தில் இருந்து பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவாதர் துறைமுகம் வரை 3,500 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாக இந்த சாலை செல்கிறது. கிழக்கு லடாக்கின் டிபிஓ பகுதியில் இருந்து 8 கி.மீ. தொலைவிலேயே பட்டுப்பாதை உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியா வசமானால் சீனாவின் பட்டுப்பாதை திட்டம் தவிடு பொடியாகும். எனவே சீன வீரர்கள் அங்கேயே முகாமிட்டுள்ளனர்.
இந்த பின்னணியில் இந்திய, சீன ராணுவ உயரதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்திய தரப்பில் மேஜர் ஜெனரல் அபிஜித் பாபத்தும் சீன தரப்பில் டின் வியன் டின்னும் பங்கேற்றனர். காலை 11 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஆலோசனை நீடித்தது.
அப்போது டிபிஓ பகுதியின் பிபி 10 முதல் பிபி 13 வரையிலான கண்காணிப்பு முனைகளில் இருந்து சீன வீரர்கள் மேலும் பின்வாங்கி செல்ல வேண்டும் என்று இந்திய தரப்பில் மீண்டும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. சீனாவின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாக இருப்பதால் எல்லையில் 100 ஹெரோன் ஆளில்லா விமானங்கள், இஸ்ரேல் தயாரிப்பான இந்த ஆளில்லா விமானங்களில் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டு தாக்குதலுக்கு தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன. இவை தவிர சுகோய் ரக போர் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன. லடாக் முதல் அருணாச்சல் வரை சீன எல்லையில் இந்திய வீரர்கள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
