உ.பி.யின் 75 மாவட்டங்களில் பரசுராமர் சிலை வைக்கும் சமாஜ்வாதி: ராமர் கோயில் பூமி பூஜைக்கு பின் பிராமண சமூக வாக்குகளுக்கு குறி

உ.பி.யின் 75 மாவட்டங்களில் பரசுராமர் சிலை வைக்கும் சமாஜ்வாதி: ராமர் கோயில் பூமி பூஜைக்கு பின் பிராமண சமூக வாக்குகளுக்கு குறி
Updated on
2 min read

ராமர் கோயில் பூமி பூஜைக்கு பின் உத்திரப்பிரதேச பிராமணர் சமூக வாக்குகளுக்கு சமாஜ்வாதி கட்சி குறி வைத்துள்ளது. இதில் அந்த சமூக ஆதரவு பெற அம்மாநிலத்தின் 75 மாவட்டங்களிலும் பரசுராமர் சிலை வைக்க முடிவு செய்துள்ளது.

ராமர் கோயில் பூமி பூஜைக்கு பின் சமாஜ்வாதி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு உ.பியின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதியின் தலைவருமான அகிலேஷ்சிங் யாதவ் தலைமை வகித்தார்.

இதில், 2022 இல் வரவிருக்கும் உபி சட்டப்பேரவை தேர்தலில் ராமர் கோயிலின் தாக்கம் குறித்தும் விவாதிக்கப்பட்டன. இதில், ராமரை பாஜக பயன்படுத்துவதை போல், பரசுராமரை முன்வைத்து அரசியல் லாபம் அள்ள சமாஜ்வாதி திட்டமிடுகிறது.

இதன் முதல்கட்டமாகப் இந்துக்கள் கடவுளாகக் கருதும் விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமர் சிலையை உபியில் உள்ள 75 மாவட்டங்களிலும் நிறுவ முடிவானது. இதில் தலைநகரான லக்னோவில் வைக்கப்படுவது 180 அடி உயரத்தில் உபியிலேயே உயரமான சிலையாக அமைய உள்ளது.

இது, கைகளில் கோடாரியை வைத்தபடி ஆஜானுபாகுவான உடல் தோற்றத்தில் பரசுராமர் சிலையை சமாஜ்வாதி அமைக்கிறது. இவற்றை உபியின் பரசுராம் சேத்னா பீடம் அறக்கட்டளையுடன் இணைந்து அமைக்கவும் சமாஜ்வாதி திட்டமிடுகிறது.

இச்சிலைகள் உருவாக்க, பிரபல சிற்பிகளான அர்ஜுன் பிரஜாபதி மற்றும் ராஜ்குமாருடன் பேச்சுவார்த்தை துவக்கி உள்ளது. இவர்கள் மறைந்த முன்னாள் பிரதமர் அட்டல் பிஹாரி வாஜ்பாயின் சிலையை செய்தவர்கள்.

கடந்த 2003 முதல் 2007 வரை உபி ஆட்சியில் இருந்த முலாயம்சிங் அரசு, பரசுராமர் ஜெயந்திக்காக அரசு விடுமுறை அளித்திருந்தது. ஆசியாவின் மிகப்பெரியதாக லக்னோவில் பிராமண சமூகத் தலைவரின் பெயரில் ஜானேஷ்வர் மிஸ்ரா பூங்காவும் அமைக்கப்பட்டது.

எனவே, வரவிருக்கும் உபி சட்டப்பேரவை தேர்தலில் பிராமண சமூகத்தினருக்கு அனைத்து அரசியல் கட்சிகளும் முக்கியத்துவம் அளிக்க முயற்சிக்கின்றனர். இந்த அரசியலில், சமீபத்தில் கான்பூர் போலீஸாரின் என்கவுண்டரில் பலியான உபியின் ரவுடி விகாஸ் துபே விவகாரமும் உள்ளது.

உபியில் பிராமண சமூக வாக்குகள் சுமார் 12 சதவிகிதம் உள்ளன. பல ஆண்டுகளாகக் காங்கிரஸிடம் இருந்த பிராமண சமூக வாக்குகள் ராமர் கோயில் வாக்குறுதியால் பாஜக பக்கம் சாயத் துவங்கியன.

தலீத் சமூகத் தலைவரான மாயாவதி, பிராமணர்களையும் தாக்கூர் சமூகத்தினருடன் ஒன்றிணைத்து ஒரு சமூகப் புரட்சிக்கு முயன்றார். இதனால், அவரது பகுஜன் சமாஜ் கட்சிக்கு 2007 தேர்தலில் தனிமெஜாரிட்டியில் ஆட்சி அமைத்தது.

2014 மக்களவைக்கு பிரதமராக நரேந்திர மோடி முன்னிறுத்தப்பட்டு வீசிய அலையால் மீண்டும் பாஜக வசம் பிராமணர் வாக்குகள் சென்றன. இது, ராமர் கோயில் பூமி பூஜையால் அக்கட்சிக்கு வரும் தேர்தலிலும் வாக்களிக்கும் சூழல் நிலவுகிறது.

இதை தடுத்து பிராமண சமூகத்தினரை தம் பக்கம் இழுக்க சமாஜ்வாதி கட்சி முயல்கிறது. பிராமண வாக்குகளை இழுப்பதில் பகுஜன் சமாஜ் கட்சியும் மீண்டும் தீவிரம் காட்டுகிறது. இதன் முக்கிய நிர்வாகிகளாக இருதினங்களுக்கு முன் பிராமண சமூகத்தினர் பலரும் அமர்த்தப்பட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in