கேரளாவில் தொடர்ந்து கனமழை: நிரம்பி வழியும் அணைகள் அடுத்தடுத்து திறப்பு; வெள்ள அபாயம்

நெய்யாறு அணை- கோப்புப் படம்
நெய்யாறு அணை- கோப்புப் படம்
Updated on
1 min read

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு அணைகளும் நிரம்பி வழிவதால் திறக்கப்பட்டு தண்ணீ்ர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கேரளாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்து வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 3 நாட்களாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடைவிடாது மழையால் பெரும்பாலான அணைகள் நிரம்பும் நிலையில் இருக்கின்றன. மிகப்பெரிய இடுக்கி அணை மட்டும் நிரம்பவில்லை.

ஆனால், இடுக்கி மாவட்டத்தின் வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புத்துறை, கரிங்குள் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்துவரும் மிகக்கனமழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையில் தற்போது 142 அடிவரை தண்ணீர் தேக்க முடியும் என்ற நிலையில் கடந்த 2 நாட்களில் பெய்த மழையால் 10 அடி நீர்மட்டம் உயர்ந்து 136அடியை எட்டியுள்ளது. இதனால் இடுக்கி மாவட்டத்தின் தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களுக்கு முதல்கட்ட எச்சரிக்கையை இடுக்கி மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ளார்.

இடுக்கி மாவட்டத்தில் பெய்துவரும் மிகக் கனமழையால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டிவிட்டதால், படிப்படியாக தண்ணீரை சுரங்கப்பாதை வழியாக வைகை அணைக்கு வெளியேற்றுங்கள் என்று தமிழக அரசுக்கு கேரள அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

இந்தநிலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. நெய்யாறு அணை நிரம்பியுள்ளது. இதனையடுத்து அணையின் 4 மதகுகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதுபோலவே அம்மாவட்டத்தில் உள்ள மற்றொரு முக்கிய அணையான அருவிக்கரா அணையும் நிரம்பியதையடுத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in