

கேரளாவின் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஓடு பாதையில் நேற்று முன்தினம் இறங்கிய பயணிகள் விமானம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்கு உள்ளானது. இதற்கு ஓடு பாதை சரியில்லாததே காரணம் என்று புகார்கள் எழுந்தன. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வெளியுறவு இணை அமைச்சர் வி.முரளிதரன் கூறியதாவது:
கோழிக்கோடு ‘டேபிள்டாப்’ விமான நிலையத்தின் ஓடு பாதை மோசமாக உள்ளதாக கூறப்படுவது சரியல்ல. ஓடு பாதை நன்றாக பராமரிக்கப்பட்டு வருவதுடன் பாதுகாப்பாகவும் உள்ளது. கரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை வந்தே பாரத் திட்டத்தின் கீழ் விமானத்தில் இந்தியா அழைத்து வந்தோம். கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் கோழிக்கோடு விமான நிலையத்தில் 100-க்கும் அதிகமான விமானங்கள் வந்து இறங்கியுள்ளன.
மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சரும் கோழிக்கோடு விமான நிலைய ஓடுபாதை குறித்து நேற்று முன்தினமே விளக்கம் அளித்துள்ளார். விபத்துக்கு ஓடு பாதையின் மோசமான நிலை காரணம் அல்ல என்றும் தெரிவித்துள்ளார். விமானத்தை இறக்கும் முதல் முயற்சி தோல்வி அடைந்ததாகவும் இரண்டாவது முறை தரையிறக்க முயற்சிக்கும் போது மழை காரணமாக விமானம் வழுக்கிச் சென்று உடைந்ததாகவும் விமான நிலையஅதிகாரிகள் என்னிடம் தெரிவித்தனர். இவ்வாறு வி.முரளிதரன் கூறினார்.