

கோழிக்கோடு விமான விபத்தில் சிக்கியவர்களை உள்ளூர் மக்கள் காப்பாற்றியது பலரையும் நெகிழச் செய்துள்ளது.
கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று முன்தினம் தரையிறங்கும் போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. விமானம் கீழே விழுந்தபோது பெரிய அளவில் வெடி சத்தம் கேட்டுள்ளது. இதைக் கேட்டதும் விமான நிலையத்துக்கு அருகில் உள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அந்த இடத்துக்கு விரைந்து சென்று விபத்தில் சிக்கியவர்களைக் காப்பாற்றியுள்ளனர்.
கோழிக்கோட்டைச் சேர்ந்த புத்தியாகத் கூறும்போது, “இரவு நேரத்தில் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. ஏதோ குண்டு வெடித்துவிட்டது என்று நினைத்து அந்தப் பகுதிக்கு ஓடி வந்தேன். அப்போது விமானம் விபத்தில் சிக்கியதை அறிந்தேன். அங்கு எல்லோரும் மரண ஓலமிட்டுக் கொண்டிருந்தனர். பலர் ரத்தக் குவியலுக்கு உள்ளே சிக்கியிருந்தனர். சிலர் நினைவிழந்து கீழே விழுந்திருந்தனர். அவர்களைக் காப்பாற்ற அருகில் இருந்தவர்களையும் அழைத்து வந்தேன்.
இதற்கு முன்பு விபத்து ஏற்பட்டால் எப்படி காப்பாற்றுவது என்று விமான நிலைய அதிகாரிகள் ஒத்திகை நடத்துவார்கள். அதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் நேற்று பார்த்த விபத்து பயங்கரமானது. ஒத்திகைக்கும், உண்மைக்கும் அதிக வித்தியாசம் உள்ளது" என்றார்.
புத்தியாகத் உள்ளிட்டோரின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்துள்ளனர். தக்க சமயத்தில் அவர்கள் நேரடியாக வந்து காயமடைந்தவர்களைக் காப்பாற்ற உதவியது பலரையும் நெகிழச் செய்துள்ளது.