

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் முதற்கட்டமாக, கடந்த 5-ம் தேதி ராமர் கோயிலுக்கான பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிலையில், ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத் ராய், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ராமர் கோயிலுக்கான அஸ்திவாரம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கவுள்ளது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தைக் கூட தாங்கும் வகையில் கோயில் கட்டுமானம் இருக்கும். கோயில் வலிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக, அதில் உள்ள தூண்களின் அஸ்திவாரமானது பூமிக்கு அடியில் மிக ஆழமாக அமைக்கப்படும். அதாவது, ஆற்றுப் பாலங்களில் அமைக்கப்படும் தூண்களின் நீளத்துக்கு இணையாக இது இருக்கும். எந்த வகை இயற்கை சீற்றங்களையும் எதிர்கொண்டு ஆயிரம் ஆண்டுகள் நிலைத்து நிற்கும் வகையில் கோயில் கட்டுமானம் இருக்கும். இவ்வாறு சம்பத் ராய் கூறினார்.