Published : 08 Aug 2020 10:06 PM
Last Updated : 08 Aug 2020 10:06 PM

கரோனா வைரஸ் பாதிப்பு சூழல்; தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

கரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராகப் போரிடக் கூடிய இன்றைய சூழ்நிலையில் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

தூய்மையான பாரதம் திட்டத்தில் அனுபவங்களை கலந்தாடல் செய்யும் மையமான ராஷ்ட்ரீய ஸ்வச்தா கேந்திராவை புதுடெல்லி ராஜ்காட்டில் காந்தி ஸ்மிர்தி மற்றும் தரிசன சமிதியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.

ஆர்.எஸ்.கே. எனப்படும் இந்த மையத்தில் தூய்மையான பாரதம் திட்டத்தின் பல நிலைகள் பற்றிய தகவல்கள் உள்ளன. 2014ஆம் ஆண்டில் 50 கோடிக்கும் மேற்பட்டோர் திறந்தவெளிக் கழிப்பிடங்களைப் பயன்படுத்தும் நிலையில் இருந்து யாருமே திறந்தவெளிக் கழிப்பிடத்தைப் பயன்படுத்துவதில்லை என்ற நிலையை 2019இல் எட்டியது வரையிலான மாற்றங்கள் பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.

இதனைத் தொடர்ந்து அந்த பகுதியை பார்வையிட்ட பிறகு, ஆர்.எஸ்.கே. சிறப்பு மலர் பகுதியை பிரதமர் சிறிது நேரம் பார்த்தார். டெல்லியில் இருந்தும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் 36 பள்ளி மாணவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

ஆர்.எஸ்.கே.வின் அரங்கில், தனி நபர் இடைவெளி நடைமுறைகளைப் பின்பற்றி இதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தங்கள் வீடு மற்றும் பள்ளிக்கூடங்களில் தூய்மையான சூழல் ஏற்படுத்துவதில் தங்கள் அனுபவங்களை மாணவர்கள் பிரதமருடன் பகிர்ந்து கொண்டனர். ஆர்.எஸ்.கே. பற்றிய தங்களது கருத்துகளையும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்.எஸ்.கே.வில் பிரதமருக்குப் பிடித்த பகுதி எது என ஒரு மாணவர் கேட்டார். மகாத்மா காந்தியின் சிந்தனையாக தூய்மையான பாரதம் திட்டம் உள்ளதை விவரிக்கும் பகுதி தமக்கு மிகவும் பிடித்திருப்பதாக பிரதமர் பதில் அளித்தார்.

பிறகு பிரதமர் உரையாற்றினார். தூய்மையான பாரதம் திட்டம் கடந்து வந்த பாதையை பிரதமர் சுருக்கமாக எடுத்துரைத்தார். ஆர்.எஸ்.கே. மையத்தை மகாத்மா காந்திக்கு நிரந்தரப் புகழ் சேர்க்கும் மையமாக அர்ப்பணிப்பதாக அவர் கூறினார். தூய்மையான பாரதம் என்பதை மக்கள் இயக்கமாக மாற்றியதற்காக மக்களுக்குப் பாராட்டு தெரிவித்த அவர், வரக் கூடிய காலங்களிலும் இதைப் பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். நம்முடைய தினசரி வாழ்க்கையில், குறிப்பாக கரோனா வைரஸ் பாதிப்புக்கு எதிராகப் போரிடக் கூடிய இன்றைய சூழ்நிலையில் தூய்மையாக இருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x