

நாட்டில் தீவிரமாகப் பரவி வரும் கரோனா வைரஸுக்கு எதிராக முன்களத்தில் பணியாற்றும் மருத்துவர்களில் இதுவரை 196 பேர் பலியாகிவிட்டார்கள். இந்த விஷயத்தில் கூடுதலாக பிரதமர் மோடி கவனம் செலுத்தி மருத்துவர்கள் நலனுக்கு உதவ வேண்டும் என்று இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (ஐஎன்ஏ) வேண்டுகோள் விடுத்துள்ளது.
கரோனா வைரஸால் நாட்டில் இதுவரை 20.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 42 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். கரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் நின்று மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் போராடி வருகின்றனர்.
மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் நோய்த் தொற்றுக்கு ஆளாகின்றனர். பலரும் உயிரிழக்கின்றனர். இந்தப் பாதிப்பிலிருந்து மருத்துவர்களையும், மருத்துவர்களின் குடும்பத்தினரையும் காக்க இந்திய மருத்துவக் கூட்டமைப்பு பிரதமர் மோடியைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு இந்திய மருத்துவக் கூட்டமைப்பு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:
''இந்திய மருத்துவக் கூட்டமைப்பு சமீபத்தில் திரட்டிய தகவலின்படி, கரோனாவுக்கு எதிராக முன்களத்தில் நின்று போராடும் மருத்துவர்களில் இதுவரை 196 பேர் உயிரைத் தியாகம் செய்துள்ளார்கள். இதில் 170 மருத்துவர்கள் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். இதில் 40 சதவீதம் பொது மருத்துவர்கள்.
நாளுக்கு நாள் கரோனாவில் மருத்துவர்கள் பாதிக்கப்படுவதும், அவர்களின் இன்னுயிரை இழப்பதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மக்களில் குறிப்பிட்ட பகுதியினர் தங்களுக்குக் காய்ச்சல், சளி தொந்தரவு எதுவாக இருந்தாலும் முதலில் பொது மருத்துவர்களைத்தான் சந்தித்து சிகிச்சை பெறுகிறார்கள்.
அப்போதே முதலில் பாதிக்கப்படும் வாய்ப்பு பொது மருத்துவர்களுக்குத்தான் அதிகம் இருக்கிறது.
ஆதலால், மருத்துவர்கள் உடல்நலத்திலும், அவர்களின் குடும்பத்தார் நலனிலும் மத்திய அரசு கூடுதலாக கவனம் செலுத்த வேண்டும். அவர்களுக்கு வாழ்நாள் காப்பீடு வசதி, சிறப்பு மருத்துவக் காப்பீடு வசதி போன்றவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும்.
நாடு முழுவதும் ஐஎம்ஏ கூட்டமைப்பில் 3.50 லட்சம் மருத்துவர்கள் இருக்கிறார்கள். மக்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் சிகிச்சையளித்து உயிர் காக்கிறார்கள். கரோனா வைரஸால் தனியார் துறையும், அரசுத் துறைகளும் எந்தவிதமான வேறுபாடும் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் எதையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் கரோனாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் கரோனாவில் பாதிக்கப்பட்டால் அவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்குப் படுக்கை வசதியும், போதுமான மருந்துகளும் இருப்பதில்லை. ஆதலால், இந்தப் பெருந்தொற்று நோய்க் காலத்தில் மருத்துவர்கள் நலனிலும், பாதுகாப்பிலும் கூடுதல் அக்கறையை மத்திய அரசு செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்''.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.
ஐஎம்ஏ கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மருத்துவர் ஆர்.பி. அசோகன் கூறுகையில், “கரோனாவில் பாதிக்கப்படும் மருத்துவர்கள் உயிரிழப்பு வீதம் என்பது மிகவும் அச்சுறுத்தலாகவும், எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் இருக்கிறது.
ஒவ்வொரு மருத்துவர் உயிரையும் காக்கும்போது, பல ஆயிரக்கணக்கான நோயாளிகளின் உயிரைக் காப்பதற்குச் சமம். மருத்துவர்கள் அவர்கள் பணியின்போது இறந்தால், அவர்களின் குடும்பத்துக்கு உதவவும், ஆறுதல் அளிக்கவும் கடமைப்பட்டுள்ளது அரசு. மருத்துவச் சமூகத்துக்கு மனச்சோர்வை ஏற்படுத்தாத வகையில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.