

உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் கடந்த 5-ம் தேதி நடந்த ராமர் கோயில் பூமி பூஜை நிகழ்ச்சியை தூர்தர்ஷன் சேனல் நேரலையில் ஒளிபரப்பியது. இதனை இந்தியாவில் 16 கோடிக்கும் அதிகமான மக்கள் பார்த்துள்ளனர் என்று அரசு ஊடகமான பிரச்சார் பாரதி தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்ச்சியின் நேரலை பிரச்சார் பாரதி மூலம் 200 சேனல்களுக்கு வழங்கப்பட்டதால், ஏறக்குறைய 700 கோடிக்கும் அதிகமான நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளன என்றும் பிரச்சார் பாரதி தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை ராமர் கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. கடந்த 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
இதில் பிரதமர் மோடி பங்கேற்று, கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், உ.பி. முதல்வர் ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்த்பென் படேல் பங்கேற்றனர். மேலும், 175 விஐபிக்கள், சாதுக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இந்த பூமி பூஜை நிகழ்ச்சியை பிரச்சார் பாரதியின் தூர்தர்ஷன் சேனல் மட்டுமே நேரலை செய்தது. அந்த சேனலிலிருந்து அனுமதி பெற்று 200-க்கும் மேற்பட்ட சேனல்கள் தங்கள் தொலைக்காட்சியில் நேரலை செய்தன.
அந்தவகையில் 5-ம் தேதி காலை 10.45 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை நடந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் இந்தியாவில் மட்டும் 16 கோடி மக்கள் பார்த்து ரசித்துள்ளனர் என்று பிரச்சார் பாரதி தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பிரச்சார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி சசி சேகர் வெம்பதி கூறுகையில், “கடந்த 5-ம் தேதி அயோத்தியில் நடந்த ராமர் கோயில் பூமி பூஜை நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியை இந்தியாவில் மட்டும் 16 கோடி மக்கள் பார்த்துள்ளனர் என எங்களின் தொடக்க நிலை ஆய்வு தெரிவிக்கிறது.
தூர்தர்ஷனிடம் இருந்து ஒளிபரப்பு உரிமை பெற்று 200 சேனல்கள் காலை 10.45 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை ஒளிபரப்பின. பார்வையாளர்கள் அடிப்படையில் இந்தியா முழுவதும் இந்த நிகழ்ச்சியை ஒட்டுமொத்தமாக 700 கோடிக்கும் அதிகமான நிமிடங்கள் பார்க்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.