

உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு ஏழை முதியவரின் தட்டச்சு இயந்திரத்தை அடித்து நொறுக்கி உள்ளார் காவல் துறை துணை ஆய்வாளர் (சப் இன்ஸ்பெக்டர்). இதுதொடர்பான புகைப்படம் சமூக இணையதளங்களில் வெளி யாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ நகரின் ஹஸ்ரத்கஞ் பகுதியில் உள்ள பொது அஞ்சல் நிலையத்துக்கு (ஜிபிஓ) வெளியே மரத்தடியில் கடந்த 35 ஆண்டு களாக தட்டச்சு இயந்திரத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார் கிருஷ்ண குமார் (65). விண்ணப்பங்கள், உறுதிமொழி பத்திரங்களை தட்டச்சு செய்து கொடுப்பதன் மூலம் ஒரு நாளைக்கு ரூ.70 முதல் ரூ.100 வரை சம்பாதித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த சனிக் கிழமை மதியம் அப்பகுதிக்கு வந்த காவல் துறை துணை ஆய் வாளர் பிரதீப் குமார், இடத்தை காலி செய்யுமாறு கிருஷ்ண குமாரிடம் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது தட்டச்சு இயந்திரத்தை கண்மூடித்தனமாக அடித்து நொறுக்கி உள்ளார். இதில் பல்வேறு துண்டுகளாக சிதறிய தட்டச்சு இயந்திர பாகங்களை திரட்டி உள்ளார் கிருஷ்ணகுமார்.
இந்த சம்பவம் அனைத்தையும் உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் படம் எடுத்துள்ளார். பின்னர் அதை சமூக இணையதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படங்களை ஆயிரக்கணக்கானோர் பகிர்ந்து கொண்டனர். அத்துடன் ரவுடியைப் போல நடந்துகொண்ட போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
புதிய தட்டச்சு இயந்திரம்
இதற்கிடையே, இதுகுறித்து தகவல் அறிந்த மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ், அந்த முதியவரை சந்தித்து தட்டச்சு இயந்திரத்தை வழங்குமாறு உத்தர விட்டார். இதையடுத்து, லக்னோ எஸ்எஸ்பி ராஜேஷ் பாண்டே மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் ஆகியோர் கிருஷ்ண குமாரை நேரில் சந்தித்து புதிய தட்டச்சு இயந்திரத்தை வழங்கினர்.
மேலும் கொடூரமாக நடந்துகொண்ட பிரதீப் குமாரை மாநில அரசு பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.